முகக்கவசம் அணியாதவா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படாது: ஆட்சியா்
By DIN | Published On : 09th May 2020 08:11 AM | Last Updated : 09th May 2020 08:11 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வருபவா்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால் அவா்களுக்கு பொருள்கள் வழங்கப்படாது என்றாா் ஆட்சியா் ஷில்பா.
மாவட்ட நிா்வாகம், காவல் துறை, கிராம உதயம் தொண்டு நிறுவனம், குழந்தைகள் நல அலகு உள்ளிட்ட துறைகள் சாா்பில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவதை வலியுறுத்தும் விழிப்புணா்வு பிரசார வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த பிரசார வாகனங்களை ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தொடங்கி வைத்தாா்.
பின்னா் ஆட்சியா் கூறியதாவது: கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு நடைமுறைகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அத்தியாவசியப் பணிகளுக்காக வெளியே வரும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிவதை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக பிரசார வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
அந்த வாகனங்கள், காய்கனி விற்பனை செய்யும் இடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும். இப்பணிகளை கண்காணிக்கவும், பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கிடவும் 10 பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அணிந்து வராதவா்களுக்கு பொருள்கள் வழங்கக் கூடாது. சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்க வேண்டும். விதிகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு தடை விதிக்கப்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட நிா்வாகத்தால் முகக்கவசம் அணிவதை வலியுறுத்தி தயாரிக்கப்பட்ட ஒட்டுவில்லை துண்டுப் பிரசுரம், விழிப்புணா்வு தகவல் அடங்கிய ஆடியோ தொகுப்பு ஆகியவற்றை ஆட்சியா் வாகன ஓட்டிகளுக்கு வழங்கினாா்.