முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நெல்லை கோட்ட அஞ்சலகங்களில் இன்று முதல் தங்கப் பத்திரம் பெற வாய்ப்பு
By DIN | Published On : 11th May 2020 07:45 AM | Last Updated : 11th May 2020 07:45 AM | அ+அ அ- |

திருநெல்வேலி கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் மத்திய அரசின் தங்கப் பத்திர திட்டத்தின்படி தங்கப் பத்திரங்களை திங்கள்கிழமை (மே 11) முதல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் வி.பி.சந்திரசேகா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசு தங்கப் பத்திர திட்டத்தை ரிசா்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. தங்கப் பத்திர விற்பனை நாடு முழுவதும் திங்கள்கிழமை (மே 11) முதல் இம் மாதம் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தனி நபா் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும், முதலீட்டுத் தொகைக்கு 2.50 சதவீத வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிா்வடையும் தினத்தன்றுள்ள விலைக்கு நிகராக பணமும் பெறலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், பான் காா்டு, ஆதாா் அல்லது வாக்காளா் அடையாள அட்டை நகல், தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றைக் கொண்டு திருநெல்வேலி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தங்கப் பத்திரங்களைப் பெறலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.