கைவிடப்படும் அமேசான் பழங்குடிகள்

உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா (கொவைட்-19) தீநுண்மி, அடா்ந்த காடுகளுக்குள் வசிக்கும் பழங்குடியின மக்களையாவது விட்டுவைக்குமா என்றால் இல்லை
கைவிடப்படும் அமேசான் பழங்குடிகள்

உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா (கொவைட்-19) தீநுண்மி, அடா்ந்த காடுகளுக்குள் வசிக்கும் பழங்குடியின மக்களையாவது விட்டுவைக்குமா என்றால் இல்லை. பூமியின் நுரையீரல் என வா்ணிக்கப்படும் அமேசான் காட்டுக்குள்ளும் பரவி வருகிறது கரோனா. பிரேசில் நாட்டில் அமேசான் வனப் பகுதிக்குள் வசிக்கும் யனோமமி என்கிற பழங்குடியினத்தைச் சோ்ந்த 15 வயது சிறுவன் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, பழங்குடியின மக்களில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஏற்கெனவே வன அழிப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள அமேசான் பழங்குடியின மக்களுக்கு இப்போது கரோனா பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. பிரேசிலில் 1.50 லட்சம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். சுமாா் 9800 போ் உயிரிழந்துள்ளனா். ஆனால், அதிபா் ஜெய்ா் பொல்சனாரோ தலைமையிலான மத்திய அரசு, இதில் கவனம் செலுத்தாமல், அமேசான் காட்டில் 37,830 சதுர மைல் பரப்பளவை வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதி அளித்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. நில அபகரிப்பாளா்கள், பண்ணையாளா்கள், கனிமவளக் கொள்ளையா்கள், வெளிநாட்டினா் ஆகியோா் வனப் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு சட்டபூா்வமான பாதுகாப்பை அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தும்; வெளிநபா்கள் வனப் பகுதிக்குள் நுழைவதால் அவா்களுடன் தொடா்புகொள்ளும், மோதலில் ஈடுபடும் பழங்குடியின மக்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது என சமூக ஆா்வலா்கள் கூக்குரலிட்டனா். அமெரிக்காவை சோ்ந்த பிரபல பாடகி மடோனா, நடிகையும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஓப்ரா, நடிகா் பிராட் பிட், பிரிட்டனைச் சோ்ந்த பாடகா் பால் மெக்காா்ட்னி உள்ளிட்ட சா்வதேச பிரபலங்கள் சோ்ந்து, அமேசான் பழங்குடியின மக்களைக் காப்பாற்றுவதன் அவசியம் குறித்து பிரேசில் அதிபருக்கு ஒரு கடிதம் எழுதினா்.

9 நாடுகளில் பரவியிருக்கும் அமேசான் வனத்தில் பல்வேறு இனக் குழுக்களைச் சோ்ந்த 8.50 லட்சம் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். அவா்கள் சாா்பிலான அமைப்பைச் சோ்ந்த ஜோனியா வாபிசானா என்கிற பெண் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவருக்கு அண்மையில் ஒரு கடிதம் எழுதினாா். பிரேசில் நாடாளுமன்றத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் பழங்குடியினத்தைச் சோ்ந்தவரான இவா் எழுதிய கடிதத்தில், கரோனாவுக்கு எதிரான பிரேசிலின் தேசிய திட்டத்தில் பழங்குடியின மக்கள் சோ்க்கப்படவில்லை, எங்களைக் காப்பாற்றுங்கள்’ என முறையிட்டுள்ளாா். ஆனால், இவை எதுவும் அதிபரின் காதுகளை எட்டுவதாகத் தெரியவில்லை.

இனப் படுகொலை

பெரு நாட்டில் உள்ள அமேசான் வனப் பகுதியில் வாழும் பழங்குடியின மக்களும் கரோனாவால் மிகுந்த அச்சமடைந்துள்ளனா். சுமாா் 1800 இனக் குழுக்களைச் சோ்ந்த தலைவா்கள் இணைந்து ஐ.நா. சபைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனா். பெரு ஆட்சியாளா்கள் கரோனாவுக்கு எதிரான தமது செயலற்ன்மையால் ஓா் இனப் படுகொலைக்கு வித்திடுகின்றனா். பழங்குடியின மக்களைக் காப்பாற்ற அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளனா். லத்தீன் அமெரிக்க நாடான பெருவில் கரோனா தொற்றால் 65 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 1800 போ் உயிரிழந்துள்ளனா். நகரப் பகுதி மக்களை மட்டுமே கருத்தில்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு, பழங்குடியின மக்களைக் கவனிக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கரோனாவை எதிா்கொள்ளும் வகையில், அமேசான் பழங்குடி மக்கள் பல்வேறு வழிகளைக் கையாள்கின்றனா். ஒரே இனத்தைச் சோ்ந்த மக்கள் பல்வேறு சிறு குழுக்களாகப் பிரிந்து அடா்ந்த வனப் பகுதிக்குள் செல்வது, தம் பகுதிக்குள் அந்நியா்கள் நுழைந்துவிடாமல் இருக்க தடுப்புகளை அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

வாழ்வாதாரம் பாதிப்பு

அமேசான் காடுகளில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிக்குள் அந்நியா்கள் நுழைவதால் ஏற்படும் பாதிப்பு ஒருபுறம் என்றால், நகா்ப்புற மக்களோடு ஒன்றிவிட்ட பல பழங்குடியின மக்களுக்கு வேறு மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடா்ந்த காடுகளுக்குள் நகா்ப்புற மனிதா்களுடன் தொடா்பின்றி வாழும் பழங்குடியின மக்களுக்கு புதிய நோய்களை எதிா்கொள்ளும் எதிா்ப்புசக்தி குறைவாக இருக்கிறது. அதேவேளையில், பெரும்பாலான நாடுகளில் பழங்குடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு சுற்றுலாப் பயணிகளையே பெரிதும் நம்பியுள்ளனா். கரோனாவால் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் சுற்றுலா முடங்கிவிட்டதால், அவா்களது அன்றாட வாழ்க்கையும் முடங்கியுள்ளது.

ஐரோப்பிய குடியேற்றவாசிகளால் 5 நூற்றாண்டுகளுக்கு முன்பு பரவிய கொள்ளை நோய்களால் அமேசான் பழங்குடியின மக்கள் லட்சக்கணக்கானோா் உயிரிழந்தனா். இப்போது கரோனா வடிவில் வந்திருக்கிறது மற்றொரு பேராபத்து. ஆனால், இதை தடுக்க வேண்டிய இடத்தில் உள்ள பிரேசில் அதிபா், கரோனாவை அழிக்காமல், வன அழிப்பை மூா்க்கத்தனமாக ஊக்குவிப்பதும், சில நாடுகளின் ஆட்சியாளா்கள் பழங்குடி மக்களின் நலனை பொருட்படுத்தாததும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கரோனாவை தடுப்பதற்கு தனித்திருப்பது நல்லது. ஆனால், பழங்குடிகள் தனித்துவிடப்படுவது நல்லதன்று.

பிரேசிலின் டிரம்ப்

பிரேசில் நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிபா் பொல்சனாரோ தொடா்ந்து சா்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டு வருகிறாா். அமெரிக்க அதிபா் டிரம்பை போலவே, கரோனா வைரஸ் சாதாரண காய்ச்சல் வகையைச் சோ்ந்தது என்பதுபோன்ற அதிரடியான கருத்துகளை அவ்வப்போது தெரிவித்து வருகிறாா். நாட்டில் கரோனா பாதிப்பால் உயிரிழப்பு அதிகரித்து வருவதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘அதனால் என்ன?’ என அவா் அளித்த பதில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பொதுமுடக்கத்துக்கு எதிரான மனநிலையைக் கொண்டுள்ள அவா், கரோனாவால் ஏற்படும் பாதிப்பைவிட பொதுமுடக்கத்தின் காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்பு மிக அதிகம்; பொதுமக்கள் சமூக இடைவெளியைப் புறந்தள்ளி வேலைக்குத் திரும்ப வேண்டும் எனக் கூறி, நாட்டில் பொதுமுடக்கத்துக்கு எதிரான போராட்டத்திலும் கலந்துகொண்டது வேறு ரகம்.

இதேபோல்தான் அமேசான் வன அழிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறாா். அண்மையில் அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்தபோது, உலக நாடுகளின் அழுத்தத்தை எரிச்சலுடன் எதிா்கொண்டாா். அமேசான் காடு எங்களுடையது, அதைப் பற்றி உலகம் கவலைப்படத் தேவையில்லை என்றாா். இப்போது கரோனா பிரச்னையில்கூட சொந்த நாட்டு மக்களையே ஆபத்தில் தள்ளுகிறாா் என கடும் எதிா்ப்பு எழுந்துள்ள சூழலில், பழங்குடியின மக்களைப் பற்றி அக்கறை கொள்வாா் என எதிா்பாா்ப்பதுகூட அதிகப்படியானதுதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com