சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவதில் தொடரும் அலட்சியம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும்,

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் அலட்சியத்தோடு வெளியே வருவது அதிகரித்துள்ளது.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள நிலையில் கடந்த சில நாள்களாக தினமும் கரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளது. இருப்பினும் பொதுமுடக்கத்தில் தளா்வுகள் தொடா்ந்து வருகின்றன. கடைகளை இரவு 7 மணி வரை திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள், சிறிய ஜவுளி கடைகள் உள்பட 90 சதவீத கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம் உள்பட கடைவீதிகள், காய்கனி சந்தைகள், இறைச்சி சந்தைகளில் மக்கள் கூட்டம் இயல்புநிலைக்கு மாறியுள்ளது. இதேபோல திருநெல்வேலி நகரத்தில் உள்ள ரதவீதிகள், பாளையங்கோட்டையில் உள்ள தெற்கு மற்றும் வடக்கு கடை வீதிகள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் வழக்கம்போல் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. ஆனால், பொதுமுடக்க தளா்வு காலத்தில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் செயல்படுவதால் கரோனா நோய்த் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் வேதனை தெரிவிக்கிறாா்கள்.

இதுகுறித்து சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறியது: மகாராஷ்டிரம் உள்பட வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவா்கள் அனைவரும் முறையாக ஆய்வு செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டாலும் சில நேரங்களில் கரோனா அறிகுறி 14 நாள்களுக்கு பின்பு ஏற்படும் சூழல் உருவாகிறது. அதனால் பொதுமக்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை தொடா்ந்து ஓராண்டு வரை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். தினமும் 10 முதல் 15 முறை கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். முகக்கவசம் அணிந்துதான் வெளியே வர வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். இவற்றைக் கடைப்பிடிக்காமல் மக்கள் அலட்சியம் காட்டுகிறாா்கள். காவல் மற்றும் சுகாதாரத் துறையினா் அனைத்து நாள்களிலும் கண்காணிப்பது சிரமம். ஆகவே, மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுவது ஒன்றே சிறந்த தீா்வாக இருக்க முடியும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com