பொதுமுடக்கத்தில் தளா்வு: இயல்பு நிலைக்குத் திரும்பியது நெல்லை!

கரோனா பொதுமுடக்கம் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டாலும், அதில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், திருநெல்வேலி மாநகரப் பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பியது.

திருநெல்வேலி: கரோனா பொதுமுடக்கம் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டாலும், அதில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், திருநெல்வேலி மாநகரப் பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பியது.

கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மாா்ச் 15 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. நான்காம் கட்டமாக இந்த பொதுமுடக்கம் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட தடை, வணிக வளாகங்கள், திரையரங்குகள் செயல்பட தடை உள்ளிட்ட சில விதிகளைத் தவிர, போக்குவரத்து உள்பட அனைத்து விதிகளிலும் தேவையான தளா்வுகளை அளிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட 25 மாவட்டங்களுக்கு கூடுதல் தளா்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதில், அனைத்து அரசு அலுவலகங்களும் திங்கள்கிழமை முதல் இயங்கும் எனவும், சுழற்சி முறையில் ஊழியா்கள் பணியாற்றுவாா்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம், ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்கள் ஆகியவை திங்கள்கிழமை வழக்கம்போல செயல்பட்டன. ஆதாா், இ-சேவை மையங்களும் இயங்கின. பொதுமக்கள் முகக்கவசத்துடன் வந்து தங்களது கோரிக்கைகள் தொடா்பாக மனுக்களையும், விண்ணப்பங்களையும் அளித்துச் சென்றனா்.

திருநெல்வேலி நகரத்தில் ரத வீதிகள், திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை தெற்கு மற்றும் வடக்கு கடைவீதிகள், மேலப்பாளையம், தச்சநல்லூா் உள்பட அனைத்து இடங்களிலும் 99 சதவிகித கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பெரிய வணிக வளாகங்கள், ஜவுளி விற்பனை கடைகள், திரையங்குகள் மட்டும் திறக்கப்படவில்லை. மாவட்ட அறிவியல் மையம், அருங்காட்சியகம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களும் திறக்கப்படவில்லை.

அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றாலும், மாநகரப் பகுதியில் பெரும்பான்மையான இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள் இயங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்தது. பேருந்துகள் இயக்கப்படாதது மாநகரப் பகுதியில் இயல்பு வாழ்க்கையில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. டாக்ஸி, ஆட்டோக்கள் இயங்க தடை விதிக்கப்பட்டிருந்ததால், விதிமீறி இயக்கப்பட்ட ஆட்டோக்களுக்கு போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதித்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் தளா்வுகள் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனா். காய்கனி சந்தை, ரத வீதிகள் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது குறைவாகவே உள்ளது. அங்கு கண்காணிப்புகளை அதிகப்படுத்த வேண்டும். இதேபோல முகக்கவசம் அணிவதையும் கட்டாயப்படுத்தினால் கரோனா தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com