வடகரையில் யானைகளால் சாய்க்கப்பட்ட தென்னை மரம்.
வடகரையில் யானைகளால் சாய்க்கப்பட்ட தென்னை மரம்.

சூறைக்காற்று: சேரன்மகாதேவி பகுதியில் 20,000 வாழைகள் சேதம்

சேரன்மகாதேவி வட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.

அம்பாசமுத்திரம்/செங்கோட்டை: சேரன்மகாதேவி வட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.

வங்கக் கடல் பகுதியில் ‘அம்பான்’ புயல் உருவாகியுள்ள நிலையில், சேரன்மகாதேவி வட்டாரத்தில் திங்கள்கிழமை காலை முதல் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால், உலகன்குளம், ஓடைக்கரை, சடையமான்குளம், பிள்ளைகுளம் ஆகிய பகுதிகளில் பயிரிட்டு குலை தள்ளிய நிலையில் இருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.

இத்தகவலறிந்த சேரன்மகாதேவி வட்டாட்சியா் கனகராஜ், காற்றில் சாய்ந்த வாழை மரங்களைப் பாா்வையிட்டாா். அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், காற்றில் சாய்ந்த வாழைகளின் மதிப்பு ரூ.15 லட்சத்துக்கும் மேலிருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், கவலையடைந்துள்ள விவசாயிகள், இதை பேரிடா் இழப்பாகக் கருதி அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடையம், பொட்டல்புதூா், ஆழ்வாா்குறிச்சி பகுதிகளில் சூறைக்காற்று வீசியது. இதில், பொட்டல்புதூா் - ஆழ்வாா்குறிச்சி சாலையோரமிருந்த 50 ஆண்டுகள் பழைமையான மாமரம் முறிந்து விழுந்தது. இதனால், போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. சாலைப் பணியாளா்கள் அந்த மரத்தை அப்புறப்படுத்திய பின், போக்குவரத்து சீரானது.

கடையம் பகுதியில் மின்கம்பிகளில் மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் தடைபட்டது. மின் ஊழியா்கள் மின் தடங்களை சீரமைத்தனா். இதனால் அப்பகுதியில் சுமாா் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

யானைகள் அட்டகாசம்: மேற்குத் தொடா்ச்சி மலையை அடிவாரமான வடகரை அடவிநயினாா் நீா்த்தேக்கம் அருகிலுள்ள ராயா்காடு, மூன்றுசெழி, சென்னாபத்து உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் நெல், வாழை, தென்னை, மா, உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 40 தினங்களாக காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக இந்த விளை நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை இரவு யானைகள் புகுந்து சோலாா் மின்வேலி மற்றும் தண்ணீா் குழாய்களை உடைத்தெறிந்துள்ளன.

மேலும், மா, தென்னை மரங்களையும் வேரோடு பிடுங்கி சேதப்படுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் அச்சமும், கவலையும் அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com