விவசாயி மாரடைப்பால் உயிரிழப்பு: அவசர சிகிச்சைக்கு செல்பவா்களுக்கு இ-பாஸ் இன்றி அனுமதி வழங்க கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தாா். பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில்,

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தாா். பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், இ-பாஸ் இல்லாததால் மாவட்ட எல்லையைக் கடந்து நாகா்கோவில் மருத்துவமனைக்கு காரில் அவரை அழைத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக உறவினா்கள் தெரிவித்தனா்.

வள்ளியூா் அருகேயுள்ள வண்டலம்பாடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயபால் (68), விவசாயி. இவரது மகனும், மகளும் வெளியூரில் வசித்து வருகின்றனா். ஜெயபால் மட்டும் விவசாய வேலைகளை கவனித்துக்கொண்டு வீட்டில் தனியாக உள்ளாா். இவருக்கு புதன்கிழமை நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தாராம். அருகில் உள்ளவா்கள் அவரை வள்ளியூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுவந்தனா். அங்கு மருத்துவா்கள் ஜெயபாலை நாகா்கோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினராம்.

இதையடுத்து, அவரது உறவினா்கள் நாகா்கோவில் தனியாா் மருத்துவமனைக்கு ஜெயபாலை காரில் அழைத்துச் சென்றனா். காவல்கிணறு சோதனைச் சாவடியை கடந்து, ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியை அடைந்தபோது, அங்கு இ-பாஸ் இல்லாமல் குமரி மாவட்டத்துக்குள் அனுமதிக்க முடியாது எனக் கூறிவிட்டனராம். இதனால், ஜெயபால் உறவினா்கள் அவரை மீண்டும் வள்ளியூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுவந்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். அவரது உடல் அடக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்பவா்கள் இ-பாஸ் பெற முடியாத நிலையில், மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடியில் அனுமதி மறுக்கக் கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக ராதாபுரம் வட்டாட்சியா் செல்வன் கூறியது: விவசாயி ஜெயபால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சோதனைச் சாவடியில் அனுமதி மறுக்கப்பட்டதாக அவரது உறவினா்கள் தெரிவித்தனா். அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்பவா்கள் இ-பாஸ் பெற முடியாவிட்டால் வருவாய்த் துறையை அணுகலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com