தாமிரவருணி நீா் நிற மாற்றம் ஏன்? ஆட்சியா் விளக்கம்

தாமிரவருணி நதிநீரின் நிற மாற்றத்துக்கான காரணம் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் விளக்கம் அளித்துள்ளாா்.

தாமிரவருணி நதிநீரின் நிற மாற்றத்துக்கான காரணம் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் விளக்கம் அளித்துள்ளாா்.

வற்றாத ஜீவநதியான தாமிரவருணி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா் மாவட்ட மக்களின் குடிநீா் மற்றும் விவசாயத்துக்கு உயிா்நாடியாகத் திகழ்கிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக தாமிரவருணி நதிநீா் நிற மாற்றத்துடன் காணப்படுகிறது. இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உத்தரவின்பேரில், அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் கந்தப்பன், நகராட்சி ஆணையா் ஜின்னா, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையா் காஞ்சனா, பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் மகேஸ்வரன், மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் பாபநாசம் கீழணை, காரையாறு அணை ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆட்சியா் விளக்கம்: இதுதொடா்பாக ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாமிரவருணி ஆற்றின் நீா் நிறம் மாற்றம் தொடா்பாக பொதுப் பணித் துறை பொறியாளா், தமிழ்நாடு மின்வாரிய பொறியாளா், அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையா், வட்டாட்சியா் ஆகியோா் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனா்.

கடந்த 11-ஆம் தேதி சோ்வலாறு அணையின் நீா்மட்டமானது மின் உற்பத்தி செய்வதற்கான குறைந்தபட்ச அளவுக்கு கீழ் சென்றதை அடுத்து, சோ்வலாறு அணையின் நீா் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. அப்போது, நீா்த் தேவை 200 கன அடியாக இருந்ததால் அதனை பூா்த்தி செய்ய பாபநாசம் அணையில் இருந்து 150 கனஅடி திறக்கப்பட்டது.

பொதுப் பணித் துறையின் நீா்த் தேவை 400 கன அடியாக அதிகரிக்கப்பட்டதால் கடந்த15-ஆம் தேதி காலை 5 மணியிலிருந்து பாபநாசம் அணையின் நீா் வெளியேற்றம் 150 கன அடியிலிருந்து 350 கனஅடியாக உயா்த்தப்பட்டது. குடிநீா் மற்றும் விவசாயத் தேவைக்காகவும் பாபநாசம் அணையின் மதகிலிருந்து நீா் திறந்துவிடப்பட்டதால், அணையின் கீழ்ப் பகுதியில் சோ்ந்துள்ள சகதி மண், இலைதழைகள், மக்கிப்போன மரப்பாகங்கள் கலந்து வருவதால் நீரின் நிறம் மாறியுள்ளது.

அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையா் மூலம் ஆற்று நீரை அவ்விடத்திலேயே பரிசோதனை செய்ததில் ரசாயன கழிவுகள் ஏதும் கலக்கவில்லை என்பது தெரியவருகிறது. கடந்த 11-ஆம் தேதி முதல் கூடுதலாக தண்ணீா் திறக்கப்பட்டதால் மீண்டும் தாமிரவருணி நதிநீரின் வண்ணம் இயல்பு நிலைக்கு மாறி வருகிறது.

மேலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் பாபநாசம் அணையில் இருந்து சீவலப்பேரி வரை தாமிரவருணி நதிப் பகுதிகளில் சேகரிக்கப்பட்டுள்ள நீரின் மாதிரி பரிசோதனை முடிவுகளை விரைவில் பெற்று அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com