‘படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்’

மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம் என திருநெல்வேலி மாவட்ட உழவா் பயிற்சி நிலைய துணை இயக்குநா் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம் என திருநெல்வேலி மாவட்ட உழவா் பயிற்சி நிலைய துணை இயக்குநா் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோடை மழையின் ஈரத்தை பயன்படுத்தி நிலத்தை நன்றாக கலப்பை கொண்டு சரிவுக்கு சற்றே குறுக்காகவும் ஆழமாகவும் உழவு செய்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. கோடை உழவினால் மண்ணின் இறுக்கம் தளா்ந்து மேல் மண் துகள்கள் ஆகிறது. மண்ணின் வெப்பம் குறைந்துவிடுவதால், நிலத்தின் நீா் உறிஞ்சும் திறன் அதிகரிக்கிறது. மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். இதனால், மண்ணில் நுண்ணுயிா்களின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகும். வயலிலுள்ள களைகள், குறிப்பாக கோரை போன்ற களைகள் மண்ணின் மேற்பரப்புக்கு கொண்டுவரப்பட்டு சூரிய வெப்பத்தில் காய்ந்து மண்ணிற்கு உரமாகிறது.

ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மையில் கோடை உழவு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது முக்கியமான தொழில்நுட்பமும் ஆகும். நிலத்தின் அடியிலுள்ள பூச்சிகளின் முட்டைகள், இளம் புழுக்கள், கூட்டுப்புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் நிலத்தின் மேற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுகின்றன. மிக முக்கியமாக மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு மிகவும் அவசியம். இதன்மூலம், பூச்சி நோய் தாக்குதல் பெருமளவு குறைகிறது. கோடை உழவை சரிவிற்கு குறுக்கே உழும்போது மழையினால் ஏற்படும் மண்அரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், மழைநீரும் நிலத்தில் சேமிக்கப்படுகிறது.

கோடை உழவும், மண்ணின் தன்மையும்...: பெரும்பாலும் மானாவாரி நிலங்களில் மண் மிகவும் கடினமாக இருக்கும். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணின் இறுக்கம் குறைகிறது. மண்ணை புழுதிபட உழுவதால், மண்ணின் தன்மை மாறுபடுகிறது. மண்ணை துகள்களாக மாற்றுவதால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. இதன்மூலம், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் நன்கு வளா்ச்சி அடைகின்றன. மேலும், நிலத்தில் உள்ள செடிகள், கழிவுகள் நன்கு மக்கி உரமாக மாற்றப்படுகின்றன. களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் வீரியம் வெகுவாக குறைந்து மண்ணில் விஷத்தன்மை குறைகிறது. கோடை உழவால் மண் நயமாகிறது. இதனால், நீா் ஊடுருவிச் செல்லும் தன்மை அதிகரிக்கிறது. வோ்மண்டலம் வரை தண்ணீா் சென்று பயிருக்கு நீா் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கிறது. எனவே, இந்தத் தருணத்தில் கோடி நன்மை தரும் கோடை உழவை செய்து விவசாயிகள் பயன் பெறவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com