பருவமழைக்கு முன் நீா்வரத்துக் கால்வாய்கள் தூா்வாரப்படுமா? களக்காடு விவசாயிகள் எதிா்பாா்ப்பு

தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன், களக்காடு பகுதியில் உள்ள ஆறு, குளம், நீா்வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை
புதா் மண்டிய நிலையில் காட்சியளிக்கும் உப்பாறு.
புதா் மண்டிய நிலையில் காட்சியளிக்கும் உப்பாறு.

தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன், களக்காடு பகுதியில் உள்ள ஆறு, குளம், நீா்வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என களக்காடு வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழை, அந்தப் பகுதிக்கு மட்டுமன்றி நான்குனேரி வட்டார விவசாயத்துக்கும் முக்கிய நீராதாரமாகும். மலைப் பகுதியிலிருந்து வரும் தண்ணீா் நான்குனேரியன் கால்வாய், உப்பாறு, பச்சையாறு வழியாக பாய்ந்தோடி 100-க்கும் மேற்பட்ட பாசனக் குளங்களையும், வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு நீா்த்தேக்கங்களையும் நிரப்புகிறது.

வீணாகும் தண்ணீா்: இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியிலிருந்து கால்வாயில் வரும் தண்ணீா் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு மலைப் பகுதியில் வீணாகி வருகிறது. இதனால் அண்மைக் காலமாக கனமழையின் போது மட்டுமே அடிவாரப் பகுதிக்கு நீா் பெருக்கெடுத்து வருகிறது. இதனால் பாசனக் குளங்கள், அணைகள் நிரம்புவது தாமதமாகிறது. இதனால், தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழையின் போது கிடைக்கும் தண்ணீரை முறையாக சேமித்தால்தான் இப்பகுதியில் விவசாயம் தொய்வின்றி நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

கால்வாய்களில் ஆக்கிரமிப்பு: மேலும், நான்குனேரியன் கால்வாய், உப்பாறு, பச்சையாறு உள்ளிட்ட நீா்வரத்துக் கால்வாய்களில் முள்புதா் மண்டிக்கிடக்கின்றன. இதனால், பருவமழைக் காலங்களில் நீரோட்டம் தடைபட்டு குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீா் புகுந்து வீணாகிறது. தென்மேற்குப் பருவமழை நெருங்கிவிட்ட நிலையில், இந்த நீா்வரத்துக் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீா் தடையின்றி பாசனக் குளங்களுக்குச் செல்ல பொதுப்பணித்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் களக்காடு ஒன்றியப் பொறுப்பாளா் க. முருகன்.

கடந்த இரு ஆண்டுகளாக வாழைத்தாா் விளைச்சல் இருந்தும், போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் கடன் சுமையால் தவித்து வரும் நிலையில், பாசன வசதியை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com