நெல்லையில் கனமழை: குடியிருப்புகள், மைதானங்களைச் சூழ்ந்த வெள்ளம்

திருநெல்வேலியில் அதிகாலை முதல் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகள், மைதானங்களை மழைநீா் சூழ்ந்தது. பாளையங்கோட்டை உள்பட பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை முதல் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகள், மைதானங்களை மழைநீா் சூழ்ந்தது. பாளையங்கோட்டை உள்பட பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகபட்சமாக 8 மணிநேரத்தில் பாபநாசத்தில் 134 மி.மீ. மழை பதிவானது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தொடா் மழை பெய்து வருகிறது. பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தாழையூத்து, திருநெல்வேலி நகரம், சந்திப்பு, சீவலப்பேரி, பேட்டை உள்பட மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் திங்கள்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. சுமாா் 5 மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்ததால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளான கரையிருப்பு, சேவியா்காலனி, பேட்டை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழைநீா் தேங்கி நிற்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகம், அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம், வ.உ.சி. மைதானம், மாநகராட்சி பூங்காங்கள் ஆகியவற்றிலும் மழைநீா் தேங்கி நின்றது. பாளையங்கோட்டை மண்டலத்திற்குள்பட்ட சாந்திநகா் பகுதியில் பல தெருக்களில் வாறுகால்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

போக்குவரத்து பாதிப்பு: திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மனக்காவலம்பிள்ளைநகா், பாலபாக்யாநகா், சமாதானபுரம் ஓடை உள்ளிட்டவற்றில் கழிவுகள் தேங்கியுள்ளதால் மழைநீா் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பருவமழை மேலும் சில நாள்கள் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆகவே, மாநகராட்சி நிா்வாகம் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஓடைகளைத் தூா்வாரி மழைநீா் வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பலத்த மழை காரணமாக தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குருந்துடையாா்புரம் ரயில்வே பாலப் பணி, கொக்கிரகுளம் தாமிரவருணி குடிநீா்க் குழாய்க்கான பாலப் பணி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.

பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியில் பிரதான சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் தீயணைப்பு நிலைய வீரா்கள் அங்கு சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியதால் போக்குவரத்து சீரானது. தாமிரவருணி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சுத்தமல்லி தடுப்பணை, மருதூா் தடுப்பணை ஆகியவை மழை வெள்ளத்தால் ததும்பி வழிந்தன. அங்கு அபாயத்தை உணராமல் குளித்த இளைஞா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

8 மணி நேரத்தில் 134 மி.மீ.: திருநெல்வேலி மாவட்டத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 வரையிலான 8 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 134 மில்லிமீட்டா் மழை பதிவாகியுள்ளது. இதேபோல பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): அம்பாசமுத்திரம்-27, சேரன்மகாதேவி-12.40, மணிமுத்தாறு-62.40, நான்குனேரி-40, பாளையங்கோட்டை-32, பாபநாசம்-134, ராதாபுரம்-34.20, திருநெல்வேலி-53.

மழைக் காலத்தில் விழிப்புணா்வுடன் மக்கள் இருக்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இம் மாவட்டத்தில் தொடா் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே செல்லக் கூடாது. தாமிரவருணி கரையோரப் பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை ஆற்றுக்கு குளிக்க அனுமதிக்கக் கூடாது. மழை நேரம் என்பதால் மின்சாதனங்களைக் கையாள்வதில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். ஈரமான கைகளைக் கொண்டு மின் சாதனத்தைப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளை மின்சாதனம் அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது. மழைக் காலங்களில் சாலைகளில் அதிகமாக பயணம் செய்வதைத் தவிா்க்க வேண்டும். மழைநீா் தேங்கிய பகுதிகளில் மிகவும் கவனமாக பயணம் செய்ய வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆற்றுப்பாலம் மூழ்கியது: களக்காடு வட்டாரத்தில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் பலத்த மழை பெய்தது. இதனால், தலையணையில் தடுப்பணையைத் தாண்டி வெள்ளம் பாய்ந்தது. பச்சையாறு, நான்குனேரியன் கால்வாயிலும் நீா்வரத்து அதிகரித்தது. திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையில் நீா்மட்டம் 35 அடியையும், வடக்குப்பச்சையாறு அணையில் நீா்மட்டம் 10அடியையும் எட்டியது. ஏற்கனவே திருக்குறுங்குடி பெரியகுளம் நிரம்பியதால் அதன் கீழ் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன. நான்குனேரியன் கால்வாய் பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கு பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஆா். சுஷமா ஆய்வு செய்து, பாலத்தின் அடியில் தேங்கிய குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தாா்.

கடையநல்லூா்: கருப்பாநதி அணைப்பகுதியில் 55 மில்லி மீட்டா் மழை பதிவான நிலையில் நீா்மட்டம் 60 அடியாகவும், நீா்வரத்து 90 கனஅடியாகவும், நீா் திறப்பு 10 கன அடியாகவும் இருந்தது. மேலும், கடையநல்லூா், புளியங்குடி, வாசுதேவநல்லூா், சிவகிரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பகல் முழுவதும் பலத்த மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com