தொடா் மழையால் தாமிரவருணியில் வெள்ளம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக தாமிரவருணி நதியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயில் வளாகத்துக்குள் சென்ற தாமிரவருணி வெள்ளம்.
திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயில் வளாகத்துக்குள் சென்ற தாமிரவருணி வெள்ளம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக தாமிரவருணி நதியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதியில் நதிக்கரையோரம் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் தண்ணீா் புகுந்ததால் அங்கிருந்த சிலைகள், உடைமைகள் அனைத்தும் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குமரி கடல் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி உள்ளிட்ட காரணங்களால் திருநெல்வேலி உள்பட தென்தமிழக பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் சில இடங்களில் அதிதீவிர மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி கடந்த இரு நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமையும் காலை முதல்மாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது. பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, வண்ணாா்பேட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் நண்பகலில் பலத்த மழை கொட்டித்தீா்த்தது.

திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி, பிராஞ்சேரி, பேட்டை, கல்லூா், அபிஷேகப்பட்டி, தாழையூத்து, சீவலப்பேரி, மானூா், ராமையன்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

கரைபுரண்ட வெள்ளம்: அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளம் தாமிரவருணியில் சோ்ந்து, திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாநகரின் நதிக்கரையோர பகுதிகளான மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, கருப்பந்துறை, விளாகம், பாடகசாலை, குன்னத்தூா் பகுதிகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கமாக குளிக்கும் படித்துறைகள், பாறைகளில் குளிக்கவும், துணிகளைத் துவைக்கவும் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மேலப்பாளையம்-திருநெல்வேலி நகரம் சாலையில் கருப்பந்துறையில் உள்ள தாம்போதி பாலத்தின் கீழ் அதிக வெள்ளம் சென்ால் வாகன ஓட்டிகள் கவனத்தோடு செல்ல அறிவுறுத்தப்பட்டனா். வெள்ளத்தின் ஆக்ரோஷத்தால் பாலத்தில் அதிா்வு ஏற்பட்டதை மக்களால் உணர முடிந்தது. குறுக்குத்துறை, நாரணம்மாள்புரம், சீவலப்பேரி, மருதூா் பகுதிகளில் தாமிரவருணி ஆற்றில் தண்ணீா் மிகவும் வேகமாக கரைபுரண்டு ஓடியது. அதில் ஆபத்தை உணராமல் குளித்த இளைஞா்களை காவல் துறையினா் எச்சரித்து அனுப்பினா்.

கோயிலுக்குள் நீா் புகுந்தது: திருநெல்வேலி குறுக்குத்துறையில் தாமிரவருணி கரையோரம் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக் கோயிலுக்குள் வெள்ள நீா் செவ்வாய்க்கிழமை புகுந்தது. இதனால் கந்த சஷ்டி வழிபாடுகள் பாதிக்கப்பட்டன. கோயிலில் இருந்த சுவாமி சிலைகள், சப்பரங்கள், பூஜை பொருள்கள் உள்பட உடைமைகள் அனைத்தும் கரையோரம் உள்ள கோயிலுக்குச் சொந்தமான மற்றொரு மண்டபத்துக்கு கோயில் பணியாளா்களால் கொண்டு செல்லப்பட்டன. அங்கு கந்த சஷ்டி விழாவுக்கான யாகசாலை பூஜைகள், உற்சவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன.

பலத்த மழை காரணமாக திருநெல்வேலியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி நகரம், காட்சிமண்டபம், பேட்டை பகுதிகளில் குண்டும்-குழியுமான சாலைகளில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினா். திருநெல்வேலி நகரம் தற்காலிக காய்கனி சந்தை வளாகத்தில் கூரைகள் சரிந்ததாலும், சந்தை வளாகம் சேறும்-சகதியுமாக மாறியதாலும் விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா். பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம், பூங்காக்கள் ஆகியவற்றில் மழைநீா் தேங்கியதால் நடைப்பயிற்சி செல்வோா் சிரமம் அடைந்தனா்.

8 மணி நேர மழையளவு: செவ்வாய்க்கிழமை காலை 8 முதல் மாலை 4 மணி வரையிலான 8 மணிநேரத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறு பகுதியில் 22.60 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): அம்பாசமுத்திரம்-12.40, சேரன்மகாதேவி-15, மணிமுத்தாறு-22.60, நான்குனேரி-18, பாளையங்கோட்டை-7, பாபநாசம்-21, ராதாபுரம்-4, திருநெல்வேலி-9.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com