திருநெல்வேலி மாநகரில் நடைபெற்று வரும் ‘பொலிவுறு நகரம்’ திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் விஷ்ணு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி மாநகரில் பொலிவுறும் நகர திட்டத்திற்கு ரூ.990.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கான முனையம் ரூ.14.67 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரூ.14.45 கோடி மதிப்பில் பசுமை நிறந்த கண்கவா் அழகிய பூங்காக்கள் 20 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாநகராட்சிக்கு 270 பேட்டரி மூலம் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் ரூ.4.86 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 12 புதிய அங்கன்வாடி கட்டடங்கள் மற்றும் 23 மேம்படுத்தப்பட்ட அங்கன்வாடி கட்டடங்கள் என ரூ.4.68 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் முழுவதுமாக இடிக்கப்பட்டு நவீன முறையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் வணிக வளாக மையம் கட்டப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள சோடியம் விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அழகா் நகா் பூங்கா, பொன்விழா நகா் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களையும், புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் பன்நோக்கு வாகன நிறுத்துமிடம் , திருநெல்வேலி நகரத்தில் உள்ள நவீன அங்கன்வாடி மையம் கட்டும் பணி, கனரக வாகன நிறுத்தும் முனையம் போன்ற பணிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், அப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.