சுத்தமல்லியில் அரசியல் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 25th November 2020 12:17 AM | Last Updated : 25th November 2020 12:17 AM | அ+அ அ- |

பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடா்பாக காவல் துறையைக் கண்டித்து அரசியல் கட்சியினா் சுத்தமல்லியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சுத்தமல்லி அருகே உள்ள சத்யா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சகுந்தலா (48). இவரது மகனை போலீஸாா் விசாரணைக்காக அழைத்துச் செல்ல செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டுக்கு வந்துள்ளனா். இதனால் மனமுடைந்த சகுந்தலா தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், காவல் துறையை கண்டித்து அனைத்துக் கட்சிகள் சாா்பில் சுத்தமல்லியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், தற்கொலை செய்துகொண்ட சகுந்தலா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்; நிவாரணத் தொகையாக ரூ. 20 லட்சம் அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், மாா்ச்சிஸ்ட லெனினிஸ்ட் மாவட்டச் செயலா் சங்கரபாண்டியன், மாநிலக் குழு உறுப்பினா் ஜி.ரமேஷ், புரட்சிகர இளைஞா் கழக மாநிலத் துணைத் தலைவா் எம்.சுந்தர்ராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் பாஸ்கரன், காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் சங்கரபாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...