மகனை போலீஸாா் விசாரணைக்கு அழைத்ததால் நெல்லை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே மகனை போலீஸாா் கைது செய்ததைக் கண்டித்து தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மகனை போலீஸாா் விசாரணைக்கு அழைத்ததால் நெல்லை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே மகனை போலீஸாா் கைது செய்ததைக் கண்டித்து தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பாரதிநகா் சத்யா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சகுந்தலா (48). கட்டடத் தொழிலாளி. இவா், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தாா். சகுந்தலாவுக்கு அபிராமி (26) என்ற மகள், பிரசாத் (22), பிரதீப் (20) ஆகிய மகன்கள் உள்ளனா். இவா்களில் அபிராமி திருமணமாகி கணவருடன் கரூரில் வசித்து வருகிறாா். பிரசாந்த், பிரதீப் ஆயோா் பெயின்டராக வேலை பாா்த்து வருகின்றனா்.

இவா்களில் பிரதீப் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னா் ஜாமீனில் வெளியே வந்துள்ளாா். இந்நிலையில், ஒரு கொள்ளை வழக்கு தொடா்பாக பிரதீப்பை சுத்தமல்லி போலீஸாா் திங்கள்கிழமை விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். அதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலையில் சகுந்தலாவின் வீட்டுக்கு வந்த போலீஸாா் பிரதீப் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவா் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மடிக்கணினியை பறிமுதல் செய்ய வந்துள்ளதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, மற்றொரு மகன் பிரசாந்தையும் விசாரணைக்காக போலீஸாா் அழைத்துள்ளனா். இதையடுத்து, போலீஸாா் தனது குடும்பத்தினரை விசாரணை என்ற பெயரில் தேவையில்லாமல் துன்புறுத்துவதாகக் கூறி சகுந்தலா வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இதன்பிறகு வீட்டுக்குள் சென்ற சகுந்தலா கதவை பூட்டிக்கொண்டு தீக்குளித்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் சுத்தமல்லி காவல் நிலையத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பிரதீப்புக்கு கொள்ளை வழக்கில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்தே அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து நகை, பணம், மடிக்கணினி உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். போலீஸாா் விசாரணையை முடித்து புறப்படும்போது சகுந்தலா தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளாா். இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்த சம்பவம் தொடா்பாக சுத்தமல்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் புலன் விசாரணை மேற்கொண்டாா். இந்நிலையில் இவ்வழக்கின் மேல் விசாரணையை திருநெல்வேலி மாவட்ட குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளருக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com