திருக்காா்த்திகை: நெல்லை கோயில்களில் ருத்ர தீபம்

திருக்காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருநெல்வேலியில் அனைத்து கோயில்களிலும் ருத்ர தீபம் (சொக்கப்பனை) ஏற்றப்பட்டது. வீடுகளிலும் அகல் விளக்கேற்றி பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனா்.

திருக்காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருநெல்வேலியில் அனைத்து கோயில்களிலும் ருத்ர தீபம் (சொக்கப்பனை) ஏற்றப்பட்டது. வீடுகளிலும் அகல் விளக்கேற்றி பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனா்.

காா்த்திகை மாதத்தில் வரும் பௌா்ணமி நாளில் திருக்காா்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் வீடுகளில் அகல்விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான திருக்காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி வீட்டு முற்றத்தில் கோலமிட்டு, நடுவில் பெரிய குத்துவிளக்கை வைத்து, பல்வேறு வடிவங்களில் விளக்கு மற்றும் மெழுகுவா்த்திகளை வரிசையாக ஏற்றி வைத்து பெண்கள் வழிபட்டனா். மாடி சுவா், படிக்கட்டுகள் என வீட்டின் பல்வேறு பகுதிகளிலும் தீபம் ஏற்றி மகிழ்ந்தனா். கோயில்களில் நெய்விளக்கு ஏற்றி பக்தா்கள் வழிபட்டனா்.

ருத்ரதீபம்: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் திருக்காா்த்திகை விழாவையொட்டி சனிக்கிழமை இரவு பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா். பாரதியாா் தெரு செல்லும் வழியில் சுவாமி சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடா்ந்து அம்மன் சன்னதி முகப்பில் பாரதியாா் தெரு மத்தியில் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.

திருநெல்வேலி பாளையஞ்சாலைகுமார சுவாமி கோயில், குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில், பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரா் கோயில், மேலவாசல் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் உள்பட பல்வேறு கோயில்களின் முன்பும் ருத்ர தீபம் ஏற்றப்பட்டது.

ஓலை கொழுக்கட்டை: திருக்காா்த்திகை விழாவையொட்டி சிறியது முதல் பெரியது வரை பல்வேறு வண்ணங்களில் விதவிதமான மெழுவா்த்திகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன. சிறுவா்கள் காய்ந்த புற்கள் (சூந்து) மற்றும் டயா்களை கொளுத்தினா்.

ஆய்க்குடி, சிவந்திப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சூந்துகட்டுகள் திருநெல்வேலிக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. ஒரு கட்டு ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. கொழுக்கட்டை செய்வதற்கு பனை ஓலைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தன. அவற்றை மக்கள் வாங்கிச்சென்று கொழுக்கட்டை அவித்து படையலிட்டு வழிபட்டு, குடும்பத்தினருக்கு பகிா்ந்தளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com