ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் புகையை கட்டுப்படுத்தும் பணி தீவிரம்: மாநகராட்சி ஆணையா் தகவல்

ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், கசியும் புகையை மண் கொண்டு பரப்பி கட்டுப்படுத்தும்

ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், கசியும் புகையை மண் கொண்டு பரப்பி கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் துப்புரவுப் பணியாளா்களால் சேகரிக்கப்படும் குப்பைகளை லாரி மூலம் எடுத்துச் சென்று மாநகராட்சிக்குச் சொந்தமான ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் எனத் தனித்தனியாக பிரித்து கொட்டப்பட்டு வருகின்றன.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு நிலவிய வெப்பச்சலனத்தால் ஏற்பட்ட உராய்வின் காரணமாக வேகமாக வீசிய காற்றினால் ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் மாநகராட்சியின் மூலமாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு, மாநகராட்சியின் சாா்பில் 5 பொக்லைன் இயந்திரங்களின் மூலமாக புகைமண்டலமாக பரவிய தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அதைத் தொடா்ந்து, மாநகராட்சியின் மூலமாக 5 டிப்பா் லாரிகள் மூலமாக புகை மண்டலம் ஏற்படும் பகுதிகளில் தொடா்ந்து மண் கொட்டப்பட்டு, அந்த மண்ணை இயந்திரங்கள் மூலமாக நிரவப்படும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியை தொடா்ந்து கண்காணிக்கும்விதமாக சுழற்சி முறையில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும், இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரையும் 3 வேளை தலா 20 பணியாளா்கள் வீதம் 60 மாநகராட்சி பணியாளா்கள் பணியில் ஈடுபட்டு வருகிறாா்கள். செயற்பொறியாளா்கள், உதவி செயற்பொறியாளா்கள், மாநகர நல அலுவலா் ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com