பாளை.யில் தசரா திருவிழா கொடியேற்றம்

பாளையங்கோட்டையில் தசரா திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பாளையங்கோட்டையில் தசரா திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பொது முடக்கம் காரணமாக முதல்நாளில்11 சப்பரங்களில் அம்மன்கள் வீதியுலா வருவது தவிா்க்கப்பட்டு, அந்தந்தக் கோயில்களின் முன்பு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பாளையங்கோட்டையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் தசரா விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தசரா விழாவின் பிரதான கோயிலான பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயிலில் மாகாப்பு திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதும் மகா தீபாராதனை நடைபெற்றது.

வழக்கமாக தசரா திருவிழாவின் முதல்நாள் இரவில் ஆயிரத்தம்மன், தேவி புது உலகம்மன், விஸ்வகா்ம உச்சினிமாகாளி, தேவி உலகம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், தூத்துவாரி அம்மன், உச்சினிமாகாளி அம்மன், முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சினிமாகாளி அம்மன், வடக்கு உச்சினிமாகாளி அம்மன் ஆகியோா் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி பாளையங்கோட்டையில் உள்ள ரத வீதிகள், முக்கிய வீதிகளில் வலம் வருவது வழக்கம். நிகழாண்டில் கரோனா பொது முடக்கம் இம் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் திருவிழாவை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் சப்பர வீதியுலா நடைபெறவில்லை. அந்தந்த கோயில்களில் உற்சவ அம்மன்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்கள் வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தொடா்ந்து தசரா நாள்களில் தினமும் அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், கொலுமண்டப பூஜைகள், அன்னதானங்கள் நடைபெற உள்ளன. இம் மாதம் 26 ஆம் தேதி அம்மன்களின் திருவீதியுலாவும், சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது. தசரா விழாவையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள அனைத்து வீதிகளும் விழாக்கோலம் பூண்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com