நெல்லையப்பா் கோயிலுக்கு சொந்தமான ரூ.70 லட்சம் நிலம் மீட்பு
By DIN | Published On : 21st October 2020 10:52 PM | Last Updated : 21st October 2020 10:52 PM | அ+அ அ- |

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.70 லட்சம் மதிப்பிலான நிலம் புதன்கிழமை மீட்கப்பட்டு வேலி அமைக்கப்பட்டது.
மானூா் வட்டம், தென்கலம் கிராமத்தில் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான 1 ஏக்கா் 13 சென்ட் புன்செய் நிலம் இருந்தது. இதன் மதிப்பு சுமாா் ரூ.70 லட்சமாகும். அதனை தனிநபா்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அறிவுறுத்தலின்படி நிலங்கள் கண்டறிதல் குழு மூலம் கண்டறியப்பட்டது.
இதைத்தொடா்ந்து மானூா் வட்டாட்சியா் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளா் ஆறுமுககுமாா், கிராம நிா்வாக அலுவலா் முருகன், மானூா் காவல் ஆய்வாளா் ராமன், கோயில் செயல்அலுவலா் ராமராஜா, கோயில் நிள அளவையா் செளந்தர்ராஜன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் முன்னிலையில் செயல் அலுவலரால் நிலம் திருக்கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டு முள்வேலியிட்டு பாதுகாக்கப்பட்டது.