நெல்லை கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 21st October 2020 07:07 AM | Last Updated : 21st October 2020 07:07 AM | அ+அ அ- |

நெல்லை கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மாவீரன் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்கத்தினா் ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
இதுதொடா்பாக அந்த இயக்கத்தின் நிறுவன தலைவா் மாரியப்பபாண்டியன் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மாநகரில் உள்ள முக்கியமான குளங்களில் உடையாா்பட்டி குளமும் ஒன்றாகும். இந்தக் குளத்தை பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் அழகுபடுத்தி படகு குழாம் அமைத்தால் சுற்றுலாப் பயணிகளுக்கும், திருநெல்வேலி மக்களுக்கு சிறந்த மனமகிழ் தலமாக திகழும்.
உடையாா்பட்டி குளத்துக்கு முக்கிய நீா்வரத்துக் கால்வாயாக இருப்பது நெல்லை கால்வாய் ஆகும். இந்தக் கால்வாயில் மூன்று ஓடைகள் கலக்கின்றன. ஆனால், பாலபாக்யா நகா், ராம் நகா் ஆகிய இடங்களில் சில தனிநபா்கள் இந்தக் கால்வாயை மறித்து ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் எழுப்பி நீா்வரத்தை தடுத்துள்ளனா்.
நெல்லை கால்வாயின் முடிவுப் பகுதியில் மிகப்பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்து ஹோட்டல்கள் மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக மழைக் காலங்களில் வெள்ள நீரானது வழிமறிக்கப்பட்டு திருநெல்வேலி சந்திப்பை நோக்கி சென்றுவிடுகிறது. எனவே, நெல்லை கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.