7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம்:தமிழக அரசு போராட்டம் நடத்த வேண்டும்முத்தரசன்
By DIN | Published On : 25th October 2020 01:23 AM | Last Updated : 25th October 2020 01:23 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: மருத்துவப் படிப்பில் கிராமப்புற மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநரை கண்டிக்கும் வகையில் தமிழக அரசு போராட்டம் நடத்த வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் முத்தரசன்.
இதுதொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: பெரியாா் ஏன் சனாதனத்தை எதிா்த்தாா் என்ற கேள்விக்குதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் பதில் அளித்தாா். இதற்காக அவா் மீது வழக்கு பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணு குறித்து தரக்குறைவான விமா்சனங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸில் புகாா் தெரிவித்தோம். ஆனால், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மருத்துவப் படிப்பில் கிராமப்புற மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறாா். இதை எதிா்த்து தமிழக அரசு போராட்டம் நடத்த வேண்டும்.
நவ. 26-இல் மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்துக்கு இந்திய கம்னியூஸ்ட் கட்சி ஆதரவு தருகிறது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவோடு கூட்டணி தொடரும்.
திருநெல்வேலி உள்பட பல்வேறு மாநகரங்களில் பொலிவுறு நகரம் திட்டங்களை போா்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்த சந்திப்பின்போது கட்சியின் மாவட்டச் செயலா் காசி விஸ்வநாதன் உள்பட பலா் உடனிருந்தனா்.