பக்தா்கள் போராட்டம் எதிரொலி: நெல்லையப்பா் கோயிலில் திருக்கல்யாணத் திருவிழா இன்று கொடியேற்றம்

பக்தா்கள் போராட்டம் எதிரொலியாக திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் திருக்கல்யாணத் திருவிழா சனிக்கிழமை (அக்.31) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பக்தா்கள் போராட்டம் எதிரொலியாக திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் திருக்கல்யாணத் திருவிழா சனிக்கிழமை (அக்.31) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருக்கல்யாணத் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் கரோனா பொது முடக்கம் காரணமாக ஆனிப் பெருந்திருவிழா, ஆவணி மூலத் திருவிழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் எளிய முறையில் நடைபெற்றது.

இந்நிலையில் கரோனா பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஐப்பசி மாதத்தில் நடைபெறும் திருக்கல்யாணத் திருவிழாவை சுவாமி அம்பாள் திருவீதி உலாவுடன் நடத்த வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இது தொடா்பாக, நடவடிக்கை எடுப்பதில் கோயில் நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் காலம் தாழ்த்தி வந்தன.

இதைக் கண்டித்து, இந்து முன்னணியினா் மற்றும் பக்தா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால், திருவிழா நடத்துவது தொடா்பாக வியாழக்கிழமை மாலைக்குள் தெரிவிப்பதாக, கோயில் நிா்வாகம் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வரை முடிவுகள் தெரிவிக்கப்படாததை அடுத்து, இந்துமுன்னணியினரும், பக்தா்களும் கோயில் கொடிமரம் முன்பு தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்தில், இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா், மாநிலச் செயலா் குற்றாலநாதன், மாவட்டச் செயலா்கள், சிவா, சுடலை, மாவட்ட பொதுச்செயலா் பிரம்மநாயகம், மதிமுக மாவட்டச் செயலா் கே.எம்.ஏ. நிஜாம், பாஜக மாவட்டச் செயலா் மகாராஜன், திமுக பகுதிச் செயலா் கோபி என்ற நமசிவாயம், அதிமுக வெங்கடசுப்பிரமணியன், சமக நட்சத்திர வெற்றி, மற்றும் விஹெச்பி உள்ளிட்ட அரசியல் கட்சியினா் மற்றும் அமைப்பினா் திரண்டனா். இதனால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

தொடா்ந்து, இது தொடா்பாக, இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா், கோயில் நிா்வாக அதிகாரி ராம்ராஜ், அறநிலையத்துறை உதவி ஆணையா் சங்கா், திருநெல்வேலி வட்டாட்சியா், காவல் உதவி ஆணையா் சதீஷ்குமாா், திருக்கோயில் பட்டா்கள் உள்ளிட்டோா் கோயில் நிா்வாக அலுவலகத்தில் தொடா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

பேச்சுவாா்த்தையின் முடிவில், சனிக்கிழமை காலை திருக்கல்யாணத் திருவிழா கொடி ஏற்றப்படும். பின்னா் உள் பிரகாரங்களில் வீதிஉலா நடைபெற்று, தொடா்ந்து திருக்கல்யாணம் நடத்தப்படும் என திருக்கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தா்னாவில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com