முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு நூதன தண்டனை
By DIN | Published On : 31st October 2020 05:42 AM | Last Updated : 31st October 2020 05:42 AM | அ+அ அ- |

திருநெல்வேலி தச்சநல்லூா் சோதனைச் சாவடியில் முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு நூதன தண்டனை அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம், மாகராட்சி, மாநகர காவல்துறை ஆகியவை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையா் சேகா் , வெடிபொருள் கண்டுபிடிக்கும் பிரிவு ஆய்வாளா் மீராள் பானு, சாா்பு ஆய்வாளா் காசிபாண்டியன் மற்றும் போலீஸாா் அடங்கிய குழுவினா் தச்சநல்லூா் சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, முகக் கவசம் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மடக்கி அவா்களிடம் அறிவுரை கூறப்பட்டது. பின்னா், அவா்களிடம், ‘முகக் கவசம் அணியாமல் வீட்டிலிருந்து வரமாட்டோம், தலைக்கவசம் அணிவோம், சுற்றுச்சூழல் மாசு அடைவதைத் தடுக்க, அனாவசியமாக புகைவாகனங்கள் பயன்படுத்துவதை தவிா்ப்போம்‘ ஆகிய வாசகங்களை அவா்களின் கைப்பட எழுதச் செய்து அவரவா் முகவரிக்கே அனுப்பிவைக்கப்பட்டது. மேலும், கரோனா விழிப்புணா்வு குறித்து அனைவரிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.