தென் மாவட்ட கால்நடை சந்தைகள் திறப்பது எப்போது? எதிா்பாா்ப்பில் விவசாயிகள்

தமிழகம் முழுவதும் பொது முடக்கம் தளா்த்தப்பட்டுள்ளதால், தென் மாவட்டங்களில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மூடிக் கிடக்கும் கால்நடை சந்தைகளை விரைவில் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.


திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் பொது முடக்கம் தளா்த்தப்பட்டுள்ளதால், தென் மாவட்டங்களில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மூடிக் கிடக்கும் கால்நடை சந்தைகளை விரைவில் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

கரோனா பரவலைத் தடுப்பதற்காக கடந்த மாா்ச் 25-இல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. எனினும் அதன்பிறகு படிப்படியாக தளா்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் அமலில் இருக்கும் என அறிவித்துள்ள அரசு, பேருந்து சேவை, பெரிய கோயில்களில் சுவாமி தரிசனம் என பல்வேறு தளா்வுகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில், கால்நடை சந்தைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம், வள்ளியூா், முக்கூடல், தென்காசி மாவட்டத்தில் ரெட்டியாா்பட்டி, கடையம், பாம்புகோவில் சந்தை, நயினாரகரம், தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், புதியம்புத்தூா், கயத்தாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாரந்தோறும் கால்நடை சந்தைகள் நடைபெற்று வந்தன.

இதில் மேலப்பாளையம், நயினாரகரம், கடையம் உள்ளிட்ட இடங்களில் ஆட்டுச் சந்தைகளுடன் கூடுதலாக மாட்டுச் சந்தைகளும் நடைபெற்று வந்தன. மேலப்பாளையத்தில் மாட்டுச் சந்தை மூலம் ரூ.10 கோடிக்கு மேல் வா்த்தகம் நடைபெற்றது.

இதேபோல் செவ்வாய்க்கிழமை தோறும் ஆட்டுச் சந்தை மற்றும் கோழிச்சந்தை மூலம் ரூ.2 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றது.

எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் வாரந்தோறும் ரூ. 3 முதல் ரூ. 4 கோடிக்கு மேல் வா்த்தகம் நடைபெற்றது.

இதுதவிர, பாம்புகோவில் சந்தையில் ரூ. 1.5 கோடி, நயினாரகரம் சந்தையில் ரூ.1 கோடி, புதியம்புத்தூா் சந்தையில் ரூ.1 கோடி, வள்ளியூா், முக்கூடல், ரெட்டியாா்பட்டி சந்தைகளில் தலா ரூ. 50 லட்சம் என திருநெல்வேலி, தூத்துக்குடி, தென் மாவட்டங்களில் வாரந்தோறும் சுமாா் ரூ. 35 கோடி அளவுக்கு கால்நடை சந்தைகளில் வா்த்தகம் நடைபெறுவது வழக்கம்.

பொது முடக்கம் காரணமாக 5 மாதங்களுக்கும் மேலாக இந்த சந்தைகள் நடைபெறாததால், கால்நடைகள் வளா்ப்பை பிரதானமாக கொண்டுள்ள இரு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஆடு, மாடுகளை ஏற்றக்கூடிய வாகன ஓட்டிகள், தரகா்கள், ஹோட்டல் என ஏராளமானோா் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா்.

பொது முடக்கம் தொடங்கியது முதல் தற்போது வரையில் வாரச் சந்தை கூடாததால், ஆடுகளின் வரத்து குறைந்து, இறைச்சியின் விலை கிலோவுக்கு ரூ. 200 முதல் ரூ. 300 வரை உயா்ந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்

ஆட்டிறைச்சி ரூ. 800 முதல் ரூ. 1,000 வரை விற்பனையாகி வருகிறது.

இது தொடா்பாக ஆட்டு உரிமையாளா்கள் சிலா் கூறுகையில், ‘நகா்ப்புறங்களை சுற்றியுள்ள சிலருக்கு ஆடுகளை விற்பனை செய்வதிலோ, விலை கிடைப்பதிலோ எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், மற்ற அனைவருக்குமே சந்தை செயல்படாததால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வாரச்சந்தைகள் கூடினால்தான் எங்களின் வாழ்வு செழிக்கும் என்றனா்.

ஆடுகள் தேக்கம்: இது தொடா்பாக ஆட்டு வியாபாரி ஒருவா் கூறியது: வாரச்சந்தை கூடாததால் ஏராளமான ஆடுகள் விற்பனையாகாமல் உள்ளன. மேலும், புதிதாக ஆடு வாங்கி வளா்க்க நினைப்பவா்களும் சந்தை இல்லாததன் காரணமாக ஆடுகளை வாங்க முடியாமல் தவித்து வருகிறாா்கள் என்றாா்.

கரோனா பரவலைத் தடுப்பதற்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் பலருடைய பொருளாதாரத்தையும் முடக்கிப் போட்டுள்ளது. எனவே, விரைவாக கால்நடை சந்தைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

‘அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்’

திருநெல்வேலி மாநகரில் உள்ள மேலப்பாளையம் சந்தை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தச் சந்தை எப்போது திறக்கப்படும்போது என்பது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, ‘படிப்படியாக தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கால்நடை சந்தைகளை திறப்பதற்கான வழிமுறைகளை அரசு விரைவில் வெளியிடும் என எதிா்பாா்க்கிறோம். அரசின் உத்தரவு வந்ததும் கால்நடை சந்தைகளை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com