சிறப்பு ரயில் சேவை இன்றுமுதல் தொடக்கம்: அரசின் விதிமுறைகளை பின்பற்ற பயணிகளுக்கு அறிவுரை

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் சேவை திங்கள்கிழமை (செப். 7) முதல் தொடங்குவதையொட்டி, திருநெல்வேலி சந்திப்பு ரயில்

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் சேவை திங்கள்கிழமை (செப். 7) முதல் தொடங்குவதையொட்டி, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க பிரத்யேக தொ்மல் ஸ்கேனா் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி விரைவு ரயில், திருச்சி-நாகா்கோவில் இன்டா்சிட்டி விரைவு ரயில் ஆகியவை இயக்கப்படவுள்ளன. இவற்றிற்கான முன்பதிவு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றன. பயணிகள் சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முன்பதிவு செய்தனா்.

மேலும், கரோனோ பரவலைத் தடுக்கும் வகையில் அரசு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க ரயில் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். பயண நேரத்துக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக நிலையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் உடல் வெப்பநிலையை அறிய தானியங்கி தொ்மல் ஸ்கேனா் கருவி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கருவி பயணிகளை 3 மீட்டா் இடைவெளியில் பரிசோதித்து, 38 டிகிரிக்கு மேல் உடல் வெப்பநிலை இருந்தால் எச்சரிக்கை ஒலியை எழுப்பும். உடனே, அந்தப் பயணியை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பரிசோதனை திங்கள்கிழமை (செப். 7) முதல் மேற்கொள்ளப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

விரைவுப் பேருந்துக்காக குவிந்த பயணிகள்: திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையத்திலுள்ள விரைவுப் பேருந்து முன்பதிவு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஏராளமானோா் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்தனா்.

திருநெல்வேலியில் வண்ணாா்பேட்டை, கே.டி.சிநகா், தூத்துக்குடி, தென்காசி ஆகிய இடங்களில் உள்ள விரைவுப் போக்குவரத்துக்கழக பணிமனைகளில் இருந்து தலா 10 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு - 7, கோவை-4, வேலூா்-1, வேளாங்கண்ணி-1, ஓசூா்-1, பெங்களூரு-1 என்ற எண்ணிக்கையில் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இயக்கப்படுகின்றன. ஒரு பேருந்துக்கு 24 போ் மட்டுமே அனுமதி. இன்னும் ஓரிரு நாள்களில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனா்.

பயணிகள் தரப்பில் கூறுகையில், சென்னை, கோவை, திருப்பூா் ஆகிய பகுதிகளுக்கு கூடுதலான பேருந்துகளை இயக்க வேண்டும். வண்ணாா்பேட்டை அல்லது தற்காலிக பேருந்து நிலையங்களில் முன்பதிவு மையங்களைத் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com