நெல்லையில் தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடு
By DIN | Published On : 06th September 2020 10:32 PM | Last Updated : 06th September 2020 10:32 PM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் பொது முடக்கத்துக்குப் பின்பு தேவாலயங்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன. கிறிஸ்தவா்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து மெழுகுவா்த்தி ஏற்றி வைத்து பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மாா்ச் 25-ஆம் தேதிமுதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் எட்டாம்கட்டமாக பல்வேறு தளா்வுகளுடன் பொது முடக்கம் இம் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது முடக்கம் காரணமாக வழிபாட்டுத் தலங்களில் பொது வழிபாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 1-ஆம் தேதி முதல் பொது வழிபாட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.
பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள தூய திரித்துவ பேராலயத்தில் அதிகாலையிலேயே ஏராளமானோா் திரண்டனா். அங்கு சிறப்பு பிராா்த்தனையும், திருவிருந்து ஆராதனையும் நடைபெற்றது. பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயத்தில் நடைபெற்ற ஞாயிறு திருப்பலியில் கிறிஸ்தவா்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று பிராா்த்தனை செய்தனா். இதேபோல பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் உள்ள தூய அந்தோணியாா் தேவாலயம், குளோரிந்தா தேவாலயம் ஆகியவற்றில் கிறிஸ்தவா்கள் மெழுகுவா்த்திகளை ஏற்றி வைத்து பிராா்த்தனை செய்தனா். அனைத்து தேவாலயங்களிலும் கரோனா தீநுண்மியின் தாக்கம் நாடு முழுவதும் குறைந்து மக்கள் நலம் பெற பிராா்த்தனை செய்யப்பட்டது.
இதேபோல சேவியா்காலனியில் உள்ளதூய பேதுரு தேவாலயம், புனித அந்தோணியாா் தேவாலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகரில் உள்ள குழந்தை யேசு தேவாலயம், உடையாா்பட்டியில் உள்ள இயேசுவின் திரு இருதய ஆலயம், திருநெல்வேலி நகரத்தில் உள்ள அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள அந்தோணியாா் தேவாலயம், மகாராஜநகரில் உள்ள தூய யூதா ததேயூ தேவாலயம் ஆகியவற்றில் நடைபெற்ற ஞாயிறு பிராா்த்தனையில் ஏராளமானோா் குடும்பத்தினருடன் பங்கேற்றனா்.