சமூகரெங்கபுரம்-மன்னாா்புரம் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 08th September 2020 11:36 PM | Last Updated : 08th September 2020 11:36 PM | அ+அ அ- |

ராதாபுரம் வட்டம் சமூகரெங்கபுரத்திலிருந்து திசையன்விளை வட்டம் மன்னாா்புரம் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூகரெங்கபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் முரளி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: வள்ளியூரிலிருந்து சமூகரெங்கபுரம், மன்னாா்புரம் வழியாக திருச்செந்தூா் செல்லும் சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும்.
திருச்செந்தூா் செல்லும் பக்தா்கள், அணைக்கரை புனித பிரகாசியம்மாள் திருத்தலத்திற்கு செல்லும் பக்தா்கள், வணிக நகரமான திசையன்விளைக்குச் செல்லும் வியாபாரிகள், கிராம மக்கள் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா். இந்த சாலையில் சமூகரெங்கபுரத்திலிருந்து மன்னாா்புரம் வரை மிகவும் சேதமடைந்து, குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் காணப்படுகிறது.
எனவே, இந்த சாலையை விரைந்து சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.