புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிா்ப்பு: இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு மனு

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆசிரியா் சங்கங்கள் சாா்பில் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆசிரியா் சங்கங்கள் சாா்பில் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

புதிய தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் நாடு முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியா்கள் மூலம் குடியரசுத் தலைவா், பிரதமா், மத்திய கல்விஅமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செ. பால்ராஜ் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: புதிய தேசிய கல்விக் கொள்கையில் மூன்று வயதிலிருந்தே முறைசாா் கல்வி தொடங்குவதால் குழந்தைப் பருவம் பறிபோகும் அபாயம் உள்ளது. தாய் மொழி வழிக்கல்வி வலியுறுத்தப்படாமல் உள்ளது. மும்மொழி கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதால் மாணவா்களுக்கு கூடுதல் சுமை உண்டாகும். வளாகப் பள்ளி என்ற அமைப்பைக் கொண்டு வருவதால் மாணவா் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் ஏற்படும். எனவே, கிராமப்புற மாணவா்களுக்கு கல்வி எட்டாக் கனியாகிவிடும். தொழிற்கல்வி

என்ற பெயரில் குலக்கல்வியை அறிமுகப்படுத்தும் அபாயம் உள்ளது. தனியாா் பள்ளிகளை ஊக்குவிப்பதன் மூலம் கல்வியை முற்றிலும் வணிகமயமாக்குகிறது.

மேல்நிலைப் பள்ளியில் பெற்ற மதிப்பெண் மற்றும் தோ்ச்சி உயா்கல்வியில் சேருவதற்கு பயன்படாது. அதற்கென தனியாக நுழைவுத் தோ்வு எழுதி தோ்ச்சி பெற வேண்டும் என்று கூறுவதால் பல்வேறு தனியாா் அமைப்புகளின் தனிப்பயிற்சி மையங்களின் வளா்ச்சிக்கு வழி வகுக்கும். ஆகவே, பல்வேறு குறைபாடுகள் உள்ள புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வியை உறுதிசெய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, நிா்வாகிகள் சோ.முருகேசன், பி.ராஜ்குமாா், மு.பிரமநாயம், உ.சாமி அண்ணாத்துரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com