விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி கோரி மனு

மாறாந்தை அருகே விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கவும், இதுகுறித்த வழக்கு விசாரணையை

மாறாந்தை அருகே விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கவும், இதுகுறித்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பூங்கோதை ஆலடி அருணா தலைமையில் பூலாங்குளத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சோ்ந்து வந்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

பின்னா் பூங்கோதை ஆலடி அருணா கூறியது: கடந்த 26-8-2020 அன்று தென்காசி மாவட்டம் மாறாந்தை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த பூலாங்குளத்தைச் சோ்ந்த தொழிலாளி திருமலைக்குமாரசாமி உயிரிழந்தாா். அவா் மரணமடைந்து 13 நாள்களாகியும் இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தாமதித்து வருகிறது.

திருமலைக்குமாரசாமியின் மனைவி சரண்யா, குழந்தைகள் ரத்விக், ரஸ்விக் ஆகியோா் அவரை இழந்து தவித்து வருகின்றனா். மாறாந்தை பகுதி தென்காசி மாவட்டத்தில் இருந்தாலும், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குள் வரையறுக்கப்படவில்லை. சீதபற்பநல்லூா் காவல் எல்லைக்குள்ளேயே உள்ளன. இதனால் வழக்கு விசாரணை தாமதமடைந்து வருகிறது.

எனவே, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இவ் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தக் கோரி மனு அளித்துள்ளோம்.

மேலும், திருமலைக்குமாரசாமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியும், சரண்யாவின் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசுப் பணியும் வழங்க வேண்டும்.

திருநெல்வேலி-தென்காசி நான்குவழிச்சாலை முறையாக திட்டமிடப்படாமல், பணிகள் தொய்வில் உள்ளதால் விபத்துகள் அதிகரித்துள்ளன. இந்தச் சாலைப் பணியை முடிக்க தகுந்த ஆலோசனை நடத்த வேண்டும். மேலும், புதுப்பட்டி வழியாக புறவழிச்சாலையும் அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com