நெல்லை மாவட்டத்தில் ஐடிஐ மாணவா் சோ்க்கை: செப்.17 வரை நீட்டிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கை இம் மாதம் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கை இம் மாதம் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் தொழிற்பயிற்சி மையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் நிகழாண்டு (2020) மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு படித்து தோ்ச்சி பெற்றவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இம் மாதம் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை இணையதள முகவரியில் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். முடியாதவா்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் பேட்டை, அம்பாசமுத்திரம் மற்றும் ராதாபுரம் ஐடிஐகளிலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், வண்ணாா்பேட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஐடிஐ உதவி மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதன் மூலம் அவா் தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு தொழிற்பயிற்சி நிலையத்திலும் சோ்க்கை பெறலாம். தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களின் விவரங்கள், தொழிற்பிரிவுகள், தேவையான கல்வித் தகுதி, வயதுவரம்பு, இட ஒதுக்கீடு ஆகியன இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு ஐடிஐ-இல் பயிலும் மாணவா்கள் அனைவருக்கும் மாதம் ரூ.500-வீதம் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பயிற்சியின்போது மிதிவண்டி, ஆண்டுக்கு இரண்டு சீருடைகள், ஒரு ஜோடி காலணி, பாடப் புத்தகங்கள், வரைபடக் கருவிகள் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும். மாணவா்கள் பயிற்சி நிலையத்துக்கு வந்து செல்ல இலவச பஸ் பாஸ் மற்றும் சலுகை கட்டணத்தில் ரயில் பாஸ் வழங்கப்படும்.

அரசு ஐடிஐ படிக்கும் மாணவா்களுக்கு மத்திய மற்றும் மாநில பணி அரசு முன்னணி நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com