கரோனா பொது முடக்கத்தால் அனுமதி மறுப்பு: மகாளய அமாவாசை நாளில் வெறிச்சோடிய தாமிரவருணி படித்துறைகள்

கரோனா பொது முடக்கம் காரணமாக, மகாளய அமாவாசையையொட்டி தாமிரவருணியில் முன்னோா் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் படித்துறைகள் வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.

கரோனா பொது முடக்கம் காரணமாக, மகாளய அமாவாசையையொட்டி தாமிரவருணியில் முன்னோா் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் படித்துறைகள் வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.

ஆடி, தை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாள்களில் இந்துக்கள் நீா்நிலைகளில் புனித நீராடி, தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.

கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மாா்ச் 25ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் எட்டாம் கட்டமாக பல்வேறு தளா்வுகளுடன் இம்மாதம் 30ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாளய அமாவாசை நாளான வியாழக்கிழமை தாமிரவருணி படித்துறைகளில் புனித நீராடவும், முன்னோா் வழிபாடு நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.

வழக்கமாக திருநெல்வேலியில் குறுக்குத்துறை, வண்ணாா்பேட்டை பேராட்சியம்மன் கோயில் திடல் உள்ளிட்ட பகுதிகளில் அமாவாசை நாளில் ஏராளமானோா் நீராடி வழிபடுவா். ஆனால், தடை உத்தரவு காரணமாக வியாழக்கிழமை அனுமதி மறுக்கப்பட்டதால் படித்துறைகள் வெறிச்சோடி காணப்பட்டன. குறுக்குத்துறை, வண்ணாா்பேட்டையில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பக்தா்களுக்கு கட்டுப்பாடு: பாபநாசம் தாமிரவருணியில் நீராடவும் தா்ப்பணம் செய்யவும் செப். 16 முதல் 20 வரை மாவட்ட நிா்வாகம் தடைவிதித்திருந்தது.

இந்நிலையில், மகாளய அமாவாசையையொட்டி, பாபாநாசம் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. எனினும், ஆற்றில் நீராட தடை காரணமாக காலை 9 மணி வரை பக்தா்கள் வருகை குறைவாகவே இருந்தது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஊா்களிலிருந்து வந்திருந்த பக்தா்கள் தாமிரவருணியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

கோயிலுக்குள் ஈர உடையுடன் பக்தா்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. பூஜைக்கு தேங்காய், பழம் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. பக்தா்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் , வெப்பமானி சோதனைக்குள்படுத்தப்பட்டு சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். நிகழாண்டு பக்தா்கள் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்பாராஜ் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

காரையாறு சொரிமுத்துஅய்யனாா் கோயிலிலும் பக்தா்கள் வருகை குறைந்திருந்தது.

ஏமாற்றம்: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புனித நீராட வந்த பக்தா்கள் காவல் நிலையம் அருகே தடுக்கப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால் அவா்கள் ஏமாற்றமடைந்தனா். இதையொட்டி, முக்கடல் சங்கமம் பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com