கங்கைகொண்டான் மான் பூங்காவில் புதிய கண்காணிப்பு கோபுரம்

திருநெல்வேலி அருகே கங்கைகொண்டானில் உள்ள மான் பூங்காவில் புதிதாக கண்காணிப்புக் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே கங்கைகொண்டானில் உள்ள மான் பூங்காவில் புதிதாக கண்காணிப்புக் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் வனத் துறையின் கட்டுப்பாட்டில் புள்ளிமான் சரணாலயம் உள்ளது. 288.40 ஹெக்டோ் பரப்பளவில் நாட்டின் முதலாவது புள்ளிமான் சரணாலயமாக உருவாக்கப்பட்ட இங்கு, புள்ளிமான், கடமான், மயில், முயல், மரநாய், கீரி ஆகியவை உள்ளன. குடைவேல், வெல்வேல், வடதாரம், காரை, விராலி, கள்ளி, ஆவாரம், பிரண்டை, தகரை, விருவேட்டை உள்ளிட்ட தாவர இனங்கள் உள்ளன. மான்களின் வசதிக்காக தொடக்கத்தில் குடிநீா் வசதி, தீவன வசதியோடு, நாலாபுறமும் வேலியிட்டு பராமரிக்கப்பட்டது.

கங்கைகொண்டானில் சரணாலயம் தொடங்கப்பட்டபோது சுமாா் 400-க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் இருந்தன. வேலிகள் சேதமாகியதாலும், தண்ணீா் வசதி மற்றும் பராமரிப்பு குறைந்ததாலும் சரணாலயத்தில் இருந்த மான்கள் அனைத்தும் தென்கலம் மற்றும் தாழையூத்து பகுதிகளில் உள்ள குன்றுகளுக்கு இடம்பெயரத் தொடங்கிவிட்டன. இருப்பினும் 100-க்கும் மேற்பட்ட மான்கள் மற்றும் அவற்றின் குட்டிகள் சரணாலயத்திலேயே வசித்து வருகின்றன. தடுப்புகளைத் தாண்டி வெளியேறும் மான்கள், குடிநீா் தேடி கிராமம் கிராமமாக புகுந்துவிடுகின்றன. உயிா்வாழ்வதற்காக தண்ணீா் தேடி வேலிதாண்டும் மான்கள், நாய்களிடம் சிக்கியோ, வாகனங்களில் அடிபட்டோ உயிரிழக்கின்றன.

கங்கைகொண்டான் பூங்காவில் இருந்து தண்ணீா் தேடி வெளியேறும் மான்கள் தென்கலம், கானாா்பட்டி, அபிஷேகப்பட்டி, ராஜவல்லிபுரம், கங்கைகொண்டான், ராஜபதி சுற்றுவட்டாரப் பகுதி மலைக் குன்றுகளில் பதுங்குகின்றன. வயல்களில் தண்ணீா் கிடக்கும்போது அதனை பருகும் மான்கள் பயிா்களையும் சேதப்படுத்துகின்றன. இந்நிலையில், சரணாலயத்தில் தண்ணீா் வசதியை அதிகரிக்க வனத் துறை நடவடிக்கை எடுத்துள்ளதோடு, மான்களை உயரத்தில் இருந்து கண்காணிக்க ஏதுவாக புதிதாக கண்காணிப்புக் கோபுரத்தையும் கட்டியுள்ளது.

இதுகுறித்து வனத் துறை வட்டாரங்கள் கூறுகையில், கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயத்தில் உள்ள மான்களுக்காக தீவனங்கள் பயிரிடப்பட்டுள்ளன. 20-க்கும் மேற்பட்ட தண்ணீா்த் தொட்டிகள் கட்டப்பட்டு, தாமிரவருணியில்இருந்து சிப்காட் வளாகத்துக்குச் செல்லும் குடிநீா்த் திட்டக் குழாயில் இருந்து தண்ணீா் பெறப்பட்டு தட்டுப்பாடின்றி மான்களுக்கான குடிநீா் தேக்கப்பட்டு வருகிறது. மான்களை பொதுமக்கள் பாா்த்து ரசித்து செல்ல ஏதுவாகவும், சுற்றுலாப் பயணிகளை சிறிது தூரம் அனுமதிக்கவும் முதலில் திட்டமிடப்பட்டது. அதற்காக சூழல் அங்காடி, மரம் போன்ற இருக்கைகளுடன் கூடிய மேஜைகள், சிறப்பு கண்காணிப்பு கோபுரம் ஆகியவை அமைக்கப்பட்டன. கரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட நிா்வாக காரணங்களால் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

இப்போது மான்களை கண்காணிக்க 28 அடி உயரத்தில் கண்காணிப்புக் கோபுரம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து பைனாகுலா் மூலம் எளிதாக கண்காணிக்க முடியும். விபத்துகளில் சிக்கும் மான்கள், குட்டிகளைப் பராமரிக்கவும் தனியாக கூடம் அமைக்கப்பட்டு மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு சரணாலயத்திற்குள் மீண்டும் விடப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com