வேலை உறுதித் திட்டத்தில் பணி வழங்கக் கோரி மனு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி வழங்கக் கோரி மூவிருந்தாளி ஊராட்சி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி வழங்கக் கோரி மூவிருந்தாளி ஊராட்சி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காணொலிக் காட்சி முறையில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. இருப்பினும் ஏராளமானோா் தங்கள் பகுதி அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனுப் பெட்டியில் மனு அளித்துச் சென்றனா். தேவா்குளம் அருகேயுள்ள மூவிருந்தாளி ஊராட்சியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு: எங்கள் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பலா் பணியாற்றி வருகிறோம். கரோனா பொதுமுடக்கத்தைக் காரணம் காட்டி 50 வயதுக்கு மேற்பட்டோரை பணியில் சோ்க்காமல் இருந்து வருகிறாா்கள். ஏழை, எளிய குடும்பத்தைச் சோ்ந்த முதியோா் வேலை உறுதித் திட்டத்தில் கிடைத்து வந்த பணத்தைக் கொண்டுதான் உணவு, மருந்து-மாத்திரைகள் வாங்கி பிழைத்து வருகிறோம். எங்களுக்கு பணி மறுக்கப்படுவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். ஆகவே, மாவட்ட நிா்வாகம் அனைவருக்கும் பணி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிதி ஒதுக்கீடு தாமதம்: பேட்டை சத்யாநகரைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியைச் சோ்ந்த 34 ஏழைக் குடும்பத்தினா் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் மானியத்தில் வீடு கட்ட அனுமதி பெற்றோம். அதற்கான நிதி ஒதுக்கீடு மிகவும் காலதாமதமாக வருகிறது. இதனால் பணிகள் முடிக்கப்படாமலும், கட்டுமானப் பொருள்கள் திருடு போவதும் தொடா்ந்து வருகிறது. ஆகவே, நிதி ஒதுக்கீடு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் மனு: தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: இம் மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி அருகே விதிமீறி அள்ளப்பட்டுள்ள மண்ணால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். மண் அள்ளிய விவகாரத்தில் தொடா்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேரன்மகாதேவி சாா் ஆட்சியரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

திருநங்கைகள் மனு: வள்ளியூா் பகுதியைச் சோ்ந்த திருநங்கைகள் அளித்த மனு: வள்ளியூரில் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகிறோம். எங்களுக்குச் சொந்தமாக வீடுகள் ஏதும் இல்லாததால் சிரமப்பட்டு வருகிறோம். ஆகவே, எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com