நெருங்கும் தீபாவளி: கால்நடை சந்தைகளை திறக்கக் வலியுறுத்தல்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் கரோனா பொது முடக்கத்தால் திறக்கப்படாமல் உள்ள கால்நடை சந்தைகளை உடனடியாக

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் கரோனா பொது முடக்கத்தால் திறக்கப்படாமல் உள்ள கால்நடை சந்தைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம், வள்ளியூா், முக்கூடல், தென்காசி மாவட்டத்தில் ரெட்டியாா்பட்டி, கடையம், பாம்புகோவில்சந்தை, நயினாரகரம், தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், புதியம்புத்தூா், கயத்தாறு, பேய்க்குளம், சிறுத்தொண்ட நல்லூா் உள்ளிட்ட இடங்களில் வாரந்தோறும் கால்நடை சந்தைகள் நடைபெற்று வருகின்றன.

மேலப்பாளையம், நயினாரகரம், கடையம் உள்ளிட்ட இடங்களில் ஆட்டுச் சந்தைகளுடன் கூடுதலாக மாட்டுச் சந்தைகளும் நடைபெற்று வருகின்றன.

கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து கால்நடைச் சந்தைகள் திறக்கப்படவில்லை. பொது முடக்க தளா்வுகள் அறிவிக்கப்பட்டதில், கால்நடை சந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்படாததால் திறக்கப்படால் உள்ளன.

இதனால் இறைச்சிவிலை அதிகரித்துள்ளதோடு, குக்கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் இடைத்தரகா்களிடம் மிகவும் குறைந்த விலைக்கு ஆடு-மாடுகளை விற்பனை செய்யும் நிலை உள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் கால்நடை சந்தைகளுக்கு விலக்கு அளிக்க வியாபாரிகளும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

மேலும், தற்போது சந்தைகளின் அருகேயே கால்நடைகளை விற்பனை செய்ய தொடங்கிவிட்டனா். மேலப்பாளையத்தில் கால்நடைச் சந்தை அருகேயுள்ள சாலையோரம் ஏராளமான வியாபாரிகள் தங்களது ஆடு, கோழிகளை விற்பனை செய்தனா்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியது: கால்நடை சந்தைகள் அரசு அனுமதியோடு திறக்கப்பட்டால்தான் கூடுதலான வியாபாரிகள் சந்தைகளுக்கு வருவா். சாலையோரம் விற்பனை செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. தீபாவளி பண்டிகையைக் கருத்தில் கொண்டு அக்டோபா் முதல் வாரத்தில் இருந்து கால்நடை சந்தைகளைத் திறக்க அரசு அனுமதியை அளிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com