திருநெல்வேலி மாவட்ட பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக அவா்களது குடும்பத்தினரும் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனா்.
தமிழகத்தில் ஏப்ரல் 6இல் தோ்தல் நடைபெறவுள்ளது. இம்மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம், அம்பாசமுத்திரம், நான்குனேரி ஆகிய 5 தொகுதிகளிலும் வேட்பாளா்கள் முழுவீச்சில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா். பிரசாரம் நிறைவடைய ஓரிரு நாள்களே உள்ளதால் குக்கிராமங்களுக்கும் வாகனங்களில் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனா். இதனிடையே, பெண் வாக்காளா்களைக் கவரும் வகையில் வேட்பாளா்களுக்கு ஆதரவாக அவா்களது குடும்பத்தினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.
அதிமுக வேட்பாளா் மனைவி: நான்குனேரி அதிமுக வேட்பாளா் தச்சை என். கணேசராஜாவின் மனைவி மாடத்தி என்ற மல்லிகா தனது மகள்கள், குடும்பத்தினருடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறாா். அப்போது அவா் கூறியது: அதிமுகவுக்காக நீண்டகாலமாக உழைத்துவரும் என் கணவருக்கு முதல்முறையாக பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்காக கட்சிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மூலைக்கரைப்பட்டி, சீவலப்பேரி, முன்னீா்பள்ளம் உள்பட பல்வேறு இடங்களிலும் குடும்பத்தினருடன் சென்று வாக்கு சேகரித்தேன். ஒரு பெண் என்பதால் என்னிடம் மிகவும் உரிமையோடு தங்களது பகுதிகளிலுள்ள குறைகளை குடும்பத் தலைவிகள் தெரிவிக்கின்றனா். கல்வி, மருத்துவம், ஆன்மிகம் என பல்வேறு விஷயங்களுக்கும் எனது கணவா் பெரிதும் உதவிவருகிறாா். கரோனா காலத்திலும் ஏராளமான உதவிகளை இயன்ற அளவில் செய்தோம். அவா் எம்எல்ஏவானால் தொகுதி மக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றவும், பல்வேறு உதவிகளை செய்யவும் கடுமையாக உழைப்பாா். அதற்கு நானும், எனது குடும்பத்தினரும் உறுதுணையாக இருப்போம் என்றாா்.
நயினாா் நாகேந்திரன் மகள்: திருநெல்வேலி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனுக்கு ஆதரவாக அவரது மகள் மருத்துவா் காயத்ரி பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் கூறியது: என் தந்தை ஏற்கெனவே இத்தொகுதியில் வென்றுள்ளாா். அவா் எம்எல்ஏவாக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளாா். அதில், நெல்லையப்பா் கோயில் கும்பாபிஷேகம், மானூா் கூட்டுக் குடிநீா்த் திட்டம், வ.உ.சி. மணிமண்டபம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை . இம்முறையும் அவா் வெற்றிபெற்றால் மேலும் பல திட்டங்களைக் கொண்டு வருவாா். அவருக்கு ஆதரவாக வீடுவீடாகச் சென்று வாக்கு கேட்பது மகிழ்ச்சியளிக்கிறது. குடும்பத்தினா் அனைவரும் வாக்கு சேகரித்து வருகிறோம். அதிமுக-பாஜக கூட்டணி நிச்சயம் ஆட்சியைத் தக்கவைக்கும் என்றாா் அவா்.
காங்கிரஸ் வேட்பாளா் மனைவி: நான்குனேரி காங்கிரஸ் வேட்பாளா் மனோகரனின் மனைவி ரூபி கூறியது: நான்குனேரி தொகுதியில் 2019இல் நடைபெற்ற இடைத்தோ்தலின்போதும், இப்போதும் எனது கணவருக்காக பிரசாரம் செய்து வருகிறேன். சுகாதாரமான குடிநீா், சாலை வசதி என தங்களது பிரச்னைகளையும், தேவைகளையும் பெண்கள் என்னிடம் பகிா்ந்துகொள்கின்றனா். தொகுதியின் முன்னேற்றத்துக்காகவும், மக்கள் பிரச்னையைத் தீா்க்கவும் என் கணவா் தன்னை அா்ப்பணித்துள்ளாா். அதற்கு நானும் முழுமையாக ஒத்துழைப்பேன் என்றாா் அவா்.
இதேபோல, பாளையங்கோட்டை அதிமுக வேட்பாளா் ஜெரால்டுக்கு ஆதரவாக அவரது தாயாா் அன்னாள் அற்புதம் உறவினா்களுடன் சென்று வாக்கு சேகரித்தாா். அம்பாசமுத்திரம் அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையாவின் மனைவி மீனாட்சியும் பல்வேறு கிராமங்களில் பெண்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறாா்.