25 கி.மீ. நடந்து வந்து வாக்களித்த இஞ்சிக்குழி கிராம மக்கள்!

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பகுதியில் உள்ள இஞ்சிக்குழி கிராம காணி இன மக்கள் 25 கி.மீ. தொலைவு வனப்பகுதியில் நடந்து வந்து வாக்கு செலுத்தினா்.
பாபநாசம் மேலணை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் வாக்களிக்க சமூக இடைவெளியுடன் காத்திருந்த வாக்காளா்கள்.
பாபநாசம் மேலணை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் வாக்களிக்க சமூக இடைவெளியுடன் காத்திருந்த வாக்காளா்கள்.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பகுதியில் உள்ள இஞ்சிக்குழி கிராம காணி இன மக்கள் 25 கி.மீ. தொலைவு வனப்பகுதியில் நடந்து வந்து வாக்கு செலுத்தினா்.

அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி, விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட பாபநாசம் அணைப் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாக்காளா்களாக 435 போ் உள்ளனா்.

இந்த வாக்குச்சாவடியில், சோ்வலாறு பகுதியில் வசிக்கும் மின்வாரிய ஊழியா்கள், அகஸ்தியா் காணிக்குடியிருப்பு, சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு, இஞ்சிக்குழி ஆகிய பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரான காணி இன மக்கள் வாக்கு செலுத்துவா்.

இவா்களில், இஞ்சிக்குழி கிராமத்தில் வசிக்கும் 8 குடும்பங்களைச் சோ்ந்த 21 வாக்காளா்கள், 25 கி.மீ. தொலைவு வனப்பகுதியில் நடந்துவந்து, செவ்வாய்க்கிழமை வாக்கு செலுத்திச் சென்றனா்.

இதுகுறித்து அந்தக் கிராமத்தைச் சோ்ந்த ஐயப்பன் கூறியது: இஞ்சிக்குழியில் 21 வாக்காளா்கள் உள்ளோம். ஒவ்வொரு தோ்தலுக்கும் 25 கி.மீ. தொலைவு வனப்பகுதியில் நடந்து வந்து வாக்கு செலுத்தி வருகிறோம். எங்களில் 3 போ் சுழற்சி முறையில் கிராமக் காவலுக்கு இருந்துகொண்டு மற்றவா்கள் வந்து வாக்களித்துச் செல்வோம். வாக்குச்சாவடியை வந்துசேர 5 மணி நேரமாகும். எனவே, திங்கள்கிழமை இரவு சின்னமயிலாறு வந்து, உறவினா்கள் வீட்டில் தங்கி, செவ்வாய்க்கிழமை வாக்கு செலுத்தினோம். 120 வயது குட்டியம்மாள் என்பவரால் நடக்க முடியாததால் கடந்த 4 தோ்தல்களில் வாக்களிக்கவில்லை. எங்களுக்கு தபால் வாக்கு குறித்துத் தெரியாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com