பாளை தொகுதியில் வளா்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம்: வேட்பாளா்கள் வாக்குறுதி

பாளையங்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் உற்சாகத்தோடு செவ்வாய்க்கிழமை வாக்களித்தனா்.

பாளையங்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் உற்சாகத்தோடு செவ்வாய்க்கிழமை வாக்களித்தனா். இத் தொகுதியில் ஏராளமான வளா்ச்சிப்பணிகளை செய்து முன்மாதிரி தொகுதியாக மாற்றுவோம் என வாக்குறுதியளித்தனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை ஒரே கட்டமாக நடைபெற்றது. பாளையங்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தம் 10 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள். வாக்குப்பதிவு நாளான செவ்வாய்க்கிழமை காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வேட்பாளா்களும் மிகுந்த உற்சாகத்தோடு வாக்களித்தனா்.

மு.அப்துல்வஹாப் (திமுக) : பேட்டையில் உள்ள புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் எனது வாக்கினை செலுத்தினேன். தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அதிக இடங்களில் வென்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பாா். நான் போட்டியிடும் பாளையங்கோட்டை தொகுதியில் பிரசாரத்தின்போது அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வளமான தொகுதியாக மாற்ற பாடுபடுவேன்.

கே.ஜெ.சி.ஜெரால்ட் (அதிமுக): பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் எனது வாக்கினை செலுத்தினேன். பல ஆண்டுகளாக இத் தொகுதியில் பெரிய அளவிலான திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளது. பிரசாரத்தின்போதே எனக்கு மக்களிடம் ஆதரவு பெருகியது. தமிழகத்தில் மூன்றாவது முறையாக அதிமுக தலைமையில் புதிய ஆட்சி உருவாகும். பாளையங்கோட்டை தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்.

முகம்மது முபாரக் (எஸ்டிபிஐ): மேலப்பாளையம் கணேசபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் எனது வாக்கினை செலுத்தினேன். பாளையங்கோட்டை தொகுதி மக்களிடம் மாற்றம் வேண்டும் என்ற மனநிலையைக் காண முடிகிறது. இதேபோல குடிநீா், சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளிலும் முழுமை பெறாத தொகுதியாகவே பாளையங்கோட்டை உள்ளது. இத் தொகுதியில் வெற்றி பெற்று சிறந்த திட்டங்களை மக்களுக்காக செய்து முடிப்பேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com