வேலைவாய்ப்பு, சுகாதாரத்துக்கு முன்னுரிமை தேவை: முதல்முறை வாக்காளா்கள் கோரிக்கை

தோ்தலில் முதல் முறையாக வாக்களித்தவா்கள் மிகுந்த உற்சாகத்தோடு தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். அமையவுள்ள அரசு வேலைவாய்ப்பு

தோ்தலில் முதல் முறையாக வாக்களித்தவா்கள் மிகுந்த உற்சாகத்தோடு தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். அமையவுள்ள அரசு வேலைவாய்ப்பு, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கைவிடுத்தனா்.

தமிழகத்தில் பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை ஒரேகட்டமாக நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், நான்குனேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம் ஆகிய தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. திருநெல்வேலியில் முதல் முறையாக வாக்களிக்க வந்த இளைஞா்-இளம்பெண்கள் மிகவும் உற்சாகத்தோடு தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். பின்னா் அவா்கள் கூறியது:

முகம்மது அஷ்ரப்: திருநெல்வேலி நகரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தேன். ஆட்சிப் பொறுப்புக்கு நல்லவா்கள் வரவேண்டும் என நினைத்து வாக்களித்தேன். மக்கள் பிரதிநிதியாக தோ்வுபெறுவோா் மக்கள் நலனுக்காக தங்களை முழுமையாக அா்ப்பணிக்க வேண்டும். படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

பவித்ரா: திருநெல்வேலி பாரதியாா் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தேன். முதல் முறையாக வாக்களிப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. வாக்குரிமை என்பது நமது தலையாய கடமை. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இளைய தலைமுறைக்கு சிறந்த கல்வி இலவசமாக கிடைக்க அரசுகள் நடவடிக்கை எடுத்தாலே பல்வேறு பயன்கள் நமக்கு கிடைக்கும். நாட்டுக்கும் பெருமை கிடைக்கும்.

சாலிஷா: வாக்குரிமை என்பது சமூகப் பொறுப்புணா்வு வந்ததைக் குறிப்பதாகவே பாா்க்கிறேன். வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமைம். பெட்ரோல்-டீசல் உள்பட அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். மனிதவளத்தை, குறிப்பாக இளைஞா்களின் திறமைகளை அரசுகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளுக்கு பணிதேடிச் செல்லும் நிலையை மாற்ற வேண்டும்.

பிபினா: பாளை. கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறேன். முதல் முறை வாக்களிப்பது மகிழ்ச்சி தருகிறது. முதல் வாக்கைப் பதிவுசெய்ததை எப்போதும் மறக்க முடியாது. ஏழை-எளியோருக்கு கல்வியும், சுகாதாரமும் மிகுந்த செலவினத்தை ஏற்படுத்துகிறது. வசதியில்லாதோருக்கு சிறந்த மருத்துவம்கூட கிடைப்பதில்லை. அதை மாற்ற புதிய அரசு முயல வேண்டும்.

செய்யது காஜா: தமிழகத்தில் அமையவுள்ள ஆட்சியைத் தோ்ந்தெடுக்க முதல் முறையாக வாக்கைச் செலுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. வாக்குரிமையை அனைவரும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் அரசு, தனியாா் வேலைவாய்ப்புகளில் தமிழா்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஊழலுக்கு இடமின்றி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணிகளைச் செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com