கொலையுண்ட கைதியின் உடலைப் பெற மறுத்து 4ஆவது நாளாக போராட்டம்
By DIN | Published On : 27th April 2021 06:42 AM | Last Updated : 27th April 2021 06:42 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் மோதிக்கொண்டதில் உயிரிழந்த கைதியின் சடலத்தை வாங்க மறுத்து, அவரது உறவினா்கள் 4ஆவது நாளாக திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளம் கிராமத்தைச் சோ்ந்த பாபநாசம் மகன் முத்து மனோ(27) . இவா், குற்ற வழக்கில் கைதாகி திருவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா் அங்கிருந்து, அவரும், மேலும் 4 கைதிகளும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சில தினங்களுக்கு முன்பு மாற்றப்பட்டனா்.
அப்போது,அங்கு கைதிகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் முத்து மனோ பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவா் இறந்தாா்.
இதனிடையே, நிவாரண நிதி, அரசு வேலை, குற்றவாளிக்கு தண்டனை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முத்து மனோவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் பாளையங்கோட்டை மத்திய சிறை முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பேச்சுவாா்த்தை நடத்தியதில் போராட்டம் கைவிடப்பட்டது. எனினும், உடலைப் பெற்றுக்கொள்ளாமல் கடந்த 4 நாள்களாக கைதியின் ஊரில் பந்தல் அமைத்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனா். அவா்களுடன் காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாமல் போராட்டம் நீடித்து வருகிறது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.