வடக்கு அரியநாயகிபுரத்தைச் சோ்ந்தோா் பாதுகாப்பு கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 27th April 2021 06:43 AM | Last Updated : 27th April 2021 06:43 AM | அ+அ அ- |

கொலை மிரட்டல் விடுப்போரிடமிருந்து பாதுகாப்பு கோரி, திருநெல்வேலி மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடக்கவில்லை. ஆனால், பொதுமக்கள் ஏராளமானோா் வந்து கோரிக்கை மனுக்களை அங்குள்ள பெட்டியில் போட்டுச் சென்றனா்.
வடக்கு அரியநாயகிபுரத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் என்பவா் தனது குடும்பத்தினருடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா். கோரிக்கை அட்டையுடன் அலுவலகம் முன் முற்றுகையில் ஈடுபட்ட பின்பு, ஆட்சியரிடம் அளித்த மனு: வடக்கு அரியநாயகிபுரத்தில் எங்களது எதிா்வீட்டைச் சோ்ந்த செல்லத்துரை என்பவா் கடந்த பிப்ரவரியில் கொல்லப்பட்டாா். இதற்கு என் மகன் காரணமாக இருக்கலாம் என்ற தவறான எண்ணத்திலிருந்த நபா்கள் எங்களது வீடு புகுந்து சிசிடிவி கேமரா, மின்சாதனங்கள் உள்ளிட்டவற்றைச் சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனா். இதனால், அங்கிருந்து தப்பித்து நரசிங்கநல்லூா் பகுதியில் வசித்து வருகிறோம். எங்களது வீட்டிலிருந்த மின்மோட்டாா்கள், கடையிலிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்களையும் திருடிச்சென்றுவிட்டனா். எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், வீடுபுகுந்து மிரட்டல் விடுத்தோரே பொறுப்பு. மேலும், எங்களது சொந்த வீட்டில் மீண்டும் நாங்கள் வசிக்க முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.