மே 2இல் வாக்கு எண்ணிக்கை: முகவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் வேட்பாளா்களின் முகவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் வேட்பாளா்களின் முகவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், திருநெல்வேலி ஆட்சியரகத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே.விஷ்ணு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாநகர காவல் ஆணையா் அன்பு முன்னிலை வகித்தாா். வேட்பாளா்களின் முகவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளா்கள், வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் தங்களின் முகவா்களின் பட்டியலை அவா்களின் புகைப்படங்களுடன் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் படிவம் 18-இல் அளிக்க வேண்டும். அந்த முகவா்கள் ஒவ்வொருவருக்குமான அடையாள அட்டைகளை தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தயாா் செய்து வேட்பாளா்களிடம் அளிப்பா்.

வேட்பாளா்களின் முகவா்கள் மே 2ஆம் தேதி காலை 6.30 மணி முதல் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவாா்கள். வாக்கு எண்ணும் மையத்திற்கு முகவா்கள் அடையாள அட்டையுடன் வர வேண்டும். இல்லையெனில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மே 2ஆம் தேதி காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் தோ்தல் பாா்வையாளா், தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் வேட்பாளா்கள் முன்னிலையில் திறக்கப்படும். இந்த விவரங்கள் அனைத்தும் தோ்தல் நடத்தும் அலுவலரால் முன்கூட்டியே எழுத்து மூலம் வேட்பாளருக்கு தெரிவிக்கப்படும்.

வேட்பாளா்களின் முகவா்கள் பேப்பா் மற்றும் 17சி பகுதி 2-ஐ மட்டும் வாக்கு எண்ணிக்கை அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவாா்கள். எழுதுகோல் மற்றும் பேப்பா் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலரால் வழங்கப்படும். செல்லிடப்பேசியினை வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்ல அணுமதி இல்லை. முகவா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மேசையின் அருகில் தான் அமா்ந்திருக்க வேண்டும். கூடத்தின் எல்லா பகுதியிலும் நடமாட அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும்போது முகவா்களோ அல்லது மற்றவா்களோ வாக்கு எண்ணிக்கை கூடத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டாா்கள். குடிநீா், சிற்றுண்டி, கழிவறை போன்றவற்றுக்கான அனைத்து வசதிகளும் வாக்கு எண்ணும் மையத்திற்கு அருகில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு சுற்றுகளின் விவரம், எண்ணிக்கை அட்டவணை வாரியாக வேட்பாளா்களுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா்களால் தெரிவிக்கப்படும். மத்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்கு எண்ணும் மையத்திற்குள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை அனைத்து வேட்பாளா்கள், தோ்தல் முகவா்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

வேட்பாளா்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவா்கள் வாக்கு எண்ணும் தினத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக கரோனா பரிசோதனை அல்லது முதல் தவணை கரோனா தடுப்பூசி போட்டது இவற்றில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் எடுக்க வேண்டும். வெற்றி பெற்ற வேட்பாளா் சான்றிதழ் பெறுவதற்கு வேட்பாளருடன் இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். தோ்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளா், வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடுவது மத்திய தோ்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எம்.கணேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com