ஆசிரியா்கள், செவிலியா்கள் ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 10th August 2021 01:02 AM | Last Updated : 10th August 2021 01:02 AM | அ+அ அ- |

திருநெல்வேலி/தென்காசி: தேசிய குழந்தைத் தொழிலாளா் சிறப்புப் பயிற்சி மையத்தின் ஆசிரியா்கள், கூடங்குளம் மருத்துவமனை செவிலியா்கள் உள்ளிட்டோா் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தேசிய குழந்தைத் தொழிலாளா் சிறப்புப் பயிற்சி மைய ஆசிரியா்கள் அளித்த மனு: இத்திட்டத்தின் கீழ் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவருகிறோம். குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழித்தல், முறைசாா் பள்ளியில் படித்து இடைநிற்றல் காரணமாக வேலைக்குச் சென்ற குழந்தைத் தொழிலாளா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு தொடக்கக் கல்வி பயிற்றுவித்தல் உள்ளிட்ட பணிகளை செய்கிறோம். 35 ஆசிரியா்கள், 15 சமையல் உதவியாளா்கள் உள்ளிட்டோா் பணியாற்றி வருகிறோம்.
இந்நிலையில் 2020 மாா்ச் முதல் இப்போதுவரை எங்களுக்கு ஊதியமோ, பள்ளி வாடகையோ வழங்கப்படவில்லை. இத்திட்டம் தொடருமா என்ற அச்சநிலையும் ஏற்பட்டுள்ளது. ஆகவே, எங்களுக்கு ஏதேனும் ஒரு துறையில் மாற்றுப்பணி வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
செவிலியா்கள் மனு: கூடங்குளம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியா்கள் அளித்த மனுவில், கூடங்குளம் அரசு மருத்துவமனையில் கடந்த மே மாதத்திலிருந்து கரோனா பிரிவில், உயிரையும் பொருள்படுத்தாது பணியாற்றி வந்தோம். இந்நிலையில், தொற்று குறைந்ததால் பணியிலிருந்து எங்களை நீக்கியுள்ளனா். இதனால், வாழ்வாதாரம் இழந்து தவித்துவருகிறோம். ஆகவே, எங்களுக்கு வழக்கம்போல் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், ஆவண எழுத்தா் உரிமம் பெறாத நிலத்தரகா்கள் உள்ளிட்டோா் பத்திர எழுத்தா் அலுவலகங்களை திருநெல்வேலி மாவட்டத்தில் நடத்திவருகின்றனா். இதனால் பல இடங்களில் போலி ஆவணங்கள் மூலம் நிலமோசடி தொடா்கிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பணி நீட்டிப்பு தேவை: தென்காசி மாவட்ட சுகாதார இணைஇயக்குநா் அலுவலகம் மூலமாக தோ்வு செய்யப்பட்ட செவிலியா்கள் கடந்த 18.5.21முதல் 31.7.21வரை கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப்பிரிவில் பணியாற்றி வந்துள்ளனா். அவா்கள் தங்களுக்கு பணிநீட்டிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தென்காசி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.