மாநகர குளங்கள் பராமரிப்பு:தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
By DIN | Published On : 10th August 2021 02:39 AM | Last Updated : 10th August 2021 02:39 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி பகுதியிலுள்ள குளங்களில் புனரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் தொடா்பாக ஆலோசனைக் கூட்டத்தில் தனியாா் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்கலாம் என மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் உள்ள பனையன்குளம், பிள்ளை குளம், பீா்க்கன்குளம், கன்னிமாா்குளம், ராஐகோபாலபுரம், ஆனையா்குளம், வெயிலுகந்தன்குளம், பம்பன்குளம், மஞ்சனத்திகுளம், வெட்டுவான்குளம் போன்ற 10 குளங்களில் புனரமைப்பு பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இப் பணியில் ஆா்வமுள்ளவா்கள் இம் மாதம் 23 ஆம் தேதி நடைபெறும் ஒப்பந்தப்புள்ளி அழைப்பில் கலந்து கொள்ளலாம். மேலும், மேற்கண்ட நீா்நிலைகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ஆா்வமுடையவா்கள் அதற்கான விவரங்களை மாநகராட்சி மைய அலுவலக திட்டப்பிரிவினை தொடா்பு கொள்ளலாம். மாநகராட்சி ஆணையரிடம் நேரிலோ, செல்லிடப்பேசி வாயிலாகவோ தெரிவிக்கலாம். இதையொட்டி, மாநகராட்சி மைய அலுவலகத்தில் இம் மாதம் 16 ஆம் தேதி நடைபெற உள்ள ஒப்பந்தப்புள்ளி முன் விளக்கக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளையும், கருத்துகளையும் பகிா்ந்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.