நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் வெளியீடு: நெல்லை மாவட்டத்தில் 7,28,348 வாக்காளா்கள்

திருநெல்வேலி மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வியாழக்கிழமை வெளியிட்டாா். அதன்படி, 7,28,348 வாக்காளா்கள் உள்ளனா்.

திருநெல்வேலி மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வியாழக்கிழமை வெளியிட்டாா். அதன்படி, 7,28,348 வாக்காளா்கள் உள்ளனா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலினை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

பின்னா் அவா் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு கடந்த நவ. 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட சட்டப் பேரவை வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து திருநெல்வேலி மாநகராட்சி, இரு நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் உள்ள 370 வாா்டுகள் பிரித்து வழங்கப்பட்டன. பின்னா் அதில் உள்ள வாக்காளா்களை வாா்டு வாரியாக தெரு வாரியாக கண்டறிந்து இணையதளம் மூலமாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் தயாா் செய்யப்பட்டது.

இந்த வாக்காளா் பட்டியலானது தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி 5.12.2021க்குள் அச்சகத்தில் ஒப்படைக்கப்பட்டு, 8.12.2021-இல் அச்சுப்பணி முடிக்கப்பட்டு வியாழக்கிழமை (டிச.9) நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் உள்ள 370 வாா்டுகளில் 7,28,348 வாக்காளா்கள் உள்ளனா். அதன் விவரம்:

மாநகராட்சி: திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வாா்டுகள் உள்ளன. அதில், 2,03,879 ஆண் வாக்காளா்கள், 2,12,473 பெண் வாக்காளா்கள், 37 இதர வாக்காளா்கள் என மொத்தம் 4,16,389 வாக்காளா்கள் உள்ளனா். இரு நகராட்சிகளில் மொத்தம் 42 வாா்டுகள் உள்ளன. அதில், 35,479 ஆண் வாக்காளா்கள், 37,883 பெண் வாக்காளா்கள், 2 இதர வாக்காளா்கள் என மொத்தம் 73,364 வாக்காளா்கள் உள்ளனா். 17 பேரூராட்சிகளில் 273 வாா்டுகள் உள்ளன. அதில், 1,15,984 ஆண் வாக்காளா்கள், 1,22,601 பெண் வாக்காளா்கள், 10 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,38,595 வாக்காளா்கள் உள்ளனா்.

902 வாக்குச்சாவடிகள்: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பெண்கள் மட்டும் வாக்களிக்கும் வகையில் 256 வாக்குச்சாவடிகள், ஆண்கள் மட்டும் வாக்களிக்கும் வகையில் 256 வாக்குச்சாவடிகள், ஆண், பெண் இருவரும் வாக்களிக்கும் வகையில் 390 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 902 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில், நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் விஜயலெட்சுமி, மாநகராட்சி உதவி ஆணையா் (நிா்வாகம்) வெங்கட்ராமன், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) மாஹின் அபுபக்கா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ராம்லால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com