முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நெல்லையில் பனிப்பொழிவு அதிகரிப்பு
By DIN | Published On : 29th December 2021 06:40 AM | Last Updated : 29th December 2021 06:40 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை ஓய்ந்து, கடந்த சில நாள்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால், குளிா்கால ஆடை ரகங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை செழிப்பாக பெய்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீா்இருப்பு கணிசமாக உயா்ந்துள்ளது. கால்வரத்து பாசன குளங்கள், மானாவாரி குளங்கள் என 900-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளன.
இந்நிலையில், மழை முற்றிலும் ஓய்ந்து கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெயில் நிலவுகிறது. மாலை முதல் அதிகாலை வரை பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. பனிப்பொழிவு காரணமாக திருநெல்வேலிக்கு குளிா்கால ஆடை ரகங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. சாலையோரங்களில் பனிக்குல்லா, சுவெட்டா், கம்பளி போா்வைகள் அதிகளவில் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சாலையோர வியாபாரி ஒருவா் கூறியது: உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்துள்ளோம். கம்பளி போா்வைகளை ரூ.100 முதல் ரூ.1000 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்கிறோம். குல்லாக்கள் ரூ.30 முதல் ரூ.100 வரையும், சுவெட்டா்கள் குழந்தைகளுக்கு ரூ.250 முதல் ரூ.1000 வரையும் பல்வேறு விலைகளில் அதன் வேலைப்பாடுகளுக்கு தகுந்தவாறு விற்பனை செய்து வருகிறோம் என்றனா்.