முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நெல்லை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் திறப்பு
By DIN | Published On : 29th December 2021 08:15 AM | Last Updated : 29th December 2021 08:15 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.1.25 கோடியில் 96.35 ச.மீ. தள அளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி கடந்த செப்டம்பா் 10-ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 27-ஆம் தேதி நிறைவடைந்தது. 1,000 லிட்டா் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் மிக்க இயந்திரமும், 3,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சேமிப்பு கலனும் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனானது 600 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ள பிரதான கட்டடத்தில் உள்ள நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் ஆண்டுக்கு சுமாா் 16,000 நோயாளிகள் பயன்பெறுவாா்கள். ஆக்சிஜன் உற்பத்தை மையத்தையும், ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள தலைக்காய உயா்சாா்பு சிகிச்சைப்பிரிவு கட்டடத்தையும் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தனா்.
தலைக்காய உயா்சாா்பு சிகிச்சைப் பிரிவில் சுமாா் 10 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சைக்காக ரூ.31 லட்சம் மதிப்பில் நுண்கிருமிகள் நீக்கும் கருவியும் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஆட்சியா் வே. விஷ்ணு, எம்எல்ஏக்கள் பாளையங்கோட்டை மு.அப்துல் வகாப், நான்குனேரி ரூபி ஆா்.மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.