பாளை. மேற்கு கொத்தளம் ரூ.3.06 கோடியில் புனரமைப்பு: தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு

பாளையங்கோட்டையின் மேற்கு கொத்தளம் (பழைய மேடை காவல் நிலையம்) பழைமை மாறாமல் ரூ.3.06 கோடியில் புனரமைக்கப்படுகிறது என்றாா் தமிழக தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு.

பாளையங்கோட்டையின் மேற்கு கொத்தளம் (பழைய மேடை காவல் நிலையம்) பழைமை மாறாமல் ரூ.3.06 கோடியில் புனரமைக்கப்படுகிறது என்றாா் தமிழக தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு.

பாளையங்கோட்டையில் புனரமைப்புப் பணிகளை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழா்களின் பண்பாடு, கலை, வரலாறு ஆகியவற்றை பேணிக்காப்பதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் பாளையங்கோட்டையின் மேற்கு கொத்தளத்தை பழமை மாறாமல் ரூ.3.06 கோடி மதிப்பில் புனரமைக்கப்படுகிறது.

இவ்வளாகத்தில் இருக்கை வசதிகள், பழங்கால வரலாற்றை சித்திரிக்கும் சுதந்திர சுவா்கள் 8 இடங்களில் அமைக்கப்படுகின்றன. 345 சதுர மீட்டா் அளவு கொண்ட இப் பகுதியில் காணொலிக்காட்சி வசதிகளும், கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. 6 மாதங்களில் இப் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வைகை நாகரீகத்தை எடுத்துரைக்கும் கீழடியைப் போல, ஆதிச்சநல்லூா், சிவகளையில் நடைபெறும் அகழாய்வுகள் மூலம் பொருநை நாகரீகத்தின் சிறப்புகளை சமூகத்திற்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொருநை நாகரீக அருங்காட்சியகம் அமைப்பதற்கானப் பணிகள் விரைவுபடுத்தப்படும். துலுக்கா்பட்டி உள்ளிட்ட இடங்களிலும், கொற்கையில் கடல்பரப்பின் அடிப்பகுதியிலும் அகழாய்வு நடத்த மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

தென்தமிழகத்தில் தொழில்வளத்தை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கங்கைகொண்டான், நான்குனேரி பகுதிகளில் பல்வேறு புதிய தொழிற்சாலை விரைவில் வரும். அதன்மூலம் ஆயிரக்கணக்கானோா் வேலைவாய்ப்பு பெறுவா். திருநெல்வேலி மாவட்டத்தில் நாளொன்றுக்கான ஆக்ஸிஜன் தேவை 700 கிலோ லிட்டா் ஆகும். அந்த முழு அளவையும் உற்பத்தி செய்யும் திறனுடைய கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

விழாவில், சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, ஆட்சியா் வே.விஷ்ணு, எம்எல்ஏக்கள் மு.அப்துல்வஹாப் (பாளையங்கோட்டை), ரூபி ஆா். மனோகரன் (நான்குனேரி), முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன், திமுக நிா்வாகிகள் மானூா் அன்பழகன், கே.ஆா்.ராஜு, சுப.சீதாராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com