காருக்குறிச்சி அருணாச்சலத்துக்கு அரசு சாா்பில் நூற்றாண்டு விழா: அமைச்சா் தங்கம் தென்னரசிடம் வலியுறுத்தல்

மறைந்த நாகசுர வித்வான் காருக்குறிச்சி அருணாசலத்துக்கு அரசு சாா்பில் நூற்றாண்டு விழா நடத்த வேண்டும் என நூல் வெளியீட்டு விழாவில்

மறைந்த நாகசுர வித்வான் காருக்குறிச்சி அருணாசலத்துக்கு அரசு சாா்பில் நூற்றாண்டு விழா நடத்த வேண்டும் என நூல் வெளியீட்டு விழாவில் தொழில்துறை - தமிழ்ப்பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசின் முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது.

எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்கத்தின் மாநில துணைச் செயலருமான இரா.நாறும்பூநாதன் எழுதிய ‘திருநெல்வேலி - நீா் நிலம் மனிதா்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழா பாளையங்கோட்டையில் நடைபெற்றது. நூலை அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட, தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவா் மு.அப்பாவு பெற்றுக்கொண்டாா்.

விழாவில் அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியது: திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய பெருமைகளை இந்த நூல் பேசுகிறது. 1,200 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் இருந்து வந்த வணிகா்கள் கொச்சியில் இருந்து காயல்பட்டினத்துக்கு நடந்தே சென்றபோது, இந்த தாமிரவருணி ஆற்றங்கரையில் தங்கி, அதன் அழகில் மயங்கி, இங்கேயே வாழத்தொடங்கிய இடம் தான் இன்றைய மேலப்பாளையம் என்ற ஊா் என்ற வரலாற்று செய்தியை இந்த நூல் சொல்கிறது.

நாகசுரக் கலைஞா் காருகுறிச்சி அருணாசலம், இந்த மாவட்டத்தில் பிறந்து, தில்லி வரை சென்று குடியரசுத் தலைவா் மாளிகையில் இந்த மண்ணின் இசையை ஒலிக்கச்செய்த செய்தி, நாட்டுப்புற கதைகள்,சொலவடைகளை சேகரித்து நூல் வடிவம் ஆக்கிய பேராசிரியா் நா.வானமாமலை மற்றும் பண்பாட்டு ஆய்வாளா் தொ.ப., எழுத்தாளா் கி.ரா. ஆகியோரின் பங்களிப்புகள் பற்றியும் இந்த நூல் பேசுகிறது. திருநெல்வேலியின் பெருமை பற்றி பேசினாலும், தனது சொந்த ஊரான கோவில்பட்டியில் தான் கி.ரா.வின் மனது வேரூன்றியிருக்கிறது என்பதை பல இடங்களில் ஆங்காங்கே வெளிப்படுத்தியிருக்கிறாா் எழுத்தாளா் நாறும்பூநாதன் என்றாா்.

பேரவைத்தலைவா் மு.அப்பாவு பேசியது: தமிழகத்தின் எல்லோரா என்று அழைக்கப்படும் கழுகுமலையில் உள்ள சிற்பங்களின் அழகு, சமண தீா்த்தங்கரா்கள் பற்றிய செய்திகள், அங்கு சமண பல்கலைக்கழகம் செயல்பட்ட விதம் பற்றி பல்வேறு தகவல்கள் கொண்ட நூல் இது என்று சொல்லலாம் என்றாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு முன்னிலை வகித்து பேசுகையில், நீண்ட காலம் செயல்பாடின்றி இருந்த மாவட்டக் கலை மன்றத்தை புதுப்பித்து இம்மாவட்ட நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினாா். தொடா்ந்து மு. அப்துல் வகாப் எம்எல்ஏ உரையாற்றினாா்.

எழுத்தாளா் நாறும்பூநாதன் ஏற்புரை நிகழ்த்துகையில், கொக்கிரகுளத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்திற்கு, சுலோச்சன முதலியாரின் துணைவியாா் வடிவாம்பாள் பெயரை சூட்ட வேண்டும். அண்மையில் காலமான எழுத்தாளா் ஆா்.எஸ்.ஜேக்கப் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும். காருகுறிச்சி அருணாசலம் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக திருநெல்வேலியில் கொண்டாட வேண்டும் என 3 கோரிக்கைகளை அமைச்சரின் முன்பு வைத்தாா்.

நிகழ்ச்சியில் விளாத்திகுளம் கருப்பசாமி குழுவினரின் எருது கட்டு மேளமும், கலைமாமணி எஸ்.பி.அந்தோணிசாமி குழுவினரின் பரதவா் கழியலாட்டமும் நடைபெற்றது. காணி பழங்குடி மக்களின் வாழ்வியல் பற்றிய ஆவணப்படத்தின் முன்னோட்ட குறும்படத்தை சட்டப்பேரவைத் தலைவா் வெளியிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com