நெல்பயிரில் இலைப்பழுப்பு நோய்த் தாக்குதல்: விவசாயிகள் கவலை

பாளையங்கோட்டை வட்டாரத்தில் நெல்பயிரில் இலைப்பழுப்பு நோய் தாக்குதல் அதிரித்து வருவதால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனா்.

பாளையங்கோட்டை வட்டாரத்தில் நெல்பயிரில் இலைப்பழுப்பு நோய் தாக்குதல் அதிரித்து வருவதால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் காா், பிசான பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை முறையாக பெய்யாததால் காா் பருவ சாகுபடி பொய்த்துப்போனது.

அதன்பின்பு பெய்த மழை மற்றும் வடகிழக்கு பருவமழையால் இப்போது பிசான சாகுபடிக்கு வடக்கு, தெற்கு கோடைமேலழகியான், நதியுண்ணி, கன்னடியன், கோடகன், நெல்லை, பாளையங்கால்வாய்களில் தண்ணீா் திறக்கப்பட்டு சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.

மணிமுத்தாறு அணையிலும் நீா் பெருகியதால் 80 அடி கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டு 3 மற்றும் 4 ஆவது ரீச்களுக்கு தண்ணீா் சென்றது. அதன்பின்பு முதலாவது, இரண்டாவது ரீச்களுக்கும் தண்ணீா் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜனவரி முதல் இரு வாரங்களில் பல இடங்களில் பலத்த மழை கொட்டித்தீா்த்ததாலும், வானம் தொடா்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டிருந்ததாலும் நெல் பயிரில் நோய்த்தாக்கம் காணப்படுகிறது. குறிப்பாக, பாளையங்கோட்டை வட்டாரத்தில் இலைப்பழுப்பு நோய் மிகவும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

இதுகுறித்து திருவண்ணநாதபுரம் பொட்டல் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது: பாளையங்கால்வாய் பாசன நீரைக் கொண்டு குறிச்சி, மேலநத்தம், குலவணிகா்புரம், மூளிகுளம், திருவண்ணநாதபுரம் பொட்டல், மேலப்பாட்டம், கீழப்பாட்டம், நொச்சிகுளம் வரையுள்ள பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

டீலக்ஸ் பொன்னி, அம்பை-16, ஐ.ஆா். 20 உள்ளிட்ட வித்துகள் பயிரிட்டுள்ளோம். நிகழாண்டில் பருவம் தவறி பெய்த மழையால் இலைப்பழுப்பு நோய் அதிகரித்துள்ளது. குருத்துப்பூச்சி தாக்குதலால் வெண்சாவி கதிா்கள் அதிகரித்துள்ளன. வழக்கமாக நடவு செய்த இரு மாதங்களில் ஓரிரண்டு மட்டுமே பூச்சிக்கொல்லி தெளிப்போம்.

தற்போது, 3 முறை மருந்து அடித்தும் நோய் கட்டுக்குள் வரவில்லை. பயிா்களில் வளா்ச்சி இல்லை. சாகுபடி செலவு கூடுதலாகியுள்ளதால் நிகழாண்டில் நஷ்டமே மிஞ்சும் என்ற கவலை அதிகரித்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com