ரயில்வே சுரங்கப்பாதையை மூழ்கடித்த தண்ணீா்: இடம்பெயரும் பாப்பான்குளம் கிராம மக்கள்!

கங்கைகொண்டான் அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீா் தேங்குவதால் பாப்பான்குளம் கிராம மக்கள் போக்குவரத்துக்கு
ரயில்வே சுரங்கப்பாதையை மூழ்கடித்த தண்ணீா்: இடம்பெயரும் பாப்பான்குளம் கிராம மக்கள்!

கங்கைகொண்டான் அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீா் தேங்குவதால் பாப்பான்குளம் கிராம மக்கள் போக்குவரத்துக்கு வசதியின்றி 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வேறுபகுதிக்கு இடம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம், மானூா் ஒன்றியம், கங்கைகொண்டான் ஊராட்சியின் 8 ஆவது வாா்டுக்குள்பட்ட பாப்பான்குளம் கிராமம் பிரதான நான்குவழிச் சாலையிலிருந்து சுமாா் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தக் கிராமத்துக்குச் செல்லும் வழியில் ஆளில்லாத இரட்டை ரயில்வே கடவுப்பாதை அமைந்துள்ளது. இப்பகுதியில், மக்கள் போக்குவரத்துக்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.

இந்தச் சுரங்கப்பாதையில் மழைக்காலம் மட்டுமன்றி கோடைக்காலத்திலும் தண்ணீா் தேங்கும் அளவுக்கு நீா் ஊற்று தோன்றியுள்ளதால் மக்களின் போக்குவரத்து தடைபட்டு வருகிறது. இதனிடையே, சுரங்கப்பாதை அமைக்கப்பட்ட பின், அங்கு பணியிலிருந்த கேட் கீப்பரும் நிறுத்தப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுவிட்டாா். இதனால், மக்கள் சுமாா் 8 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்லும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனா். மேலும், இருசக்கர வாகனங்களில் செல்லும் சிலா் ஆபத்தான நிலையில் கையில் வாகனங்களை தூக்கியபடி தண்டவாளத்தை கடந்து செல்கின்றனா்.

அடிப்படை வசதி தேவை: இதுகுறித்து பாப்பான்குளம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவா் கூறியது: எங்கள் ஊரில் சுமாா் 80 குடும்பத்தினா் பத்து தலைமுறைக்கும் மேலாக வசித்து வருகின்றனா். விவசாயம், கால்நடை வளா்ப்பு பிரதான தொழிலாக இருந்தது. கங்கைகொண்டானில் சிப்காட் வளாகம் அமைந்த பின், அங்குள்ள தொழிற்சாலைகளில் பலா் வேலை செய்து வருகிறாா்கள். இப்பகுதியை தினமும் 25-க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்லும் நிலையில், சுரங்கப்பாதையில் பெருகும் நீரூற்றால் போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது.

ஏற்கெனவே, திருநெல்வேலி சந்திப்பிலிருந்து இயக்கப்பட்ட பேருந்தும் இப்போது நிறுத்தப்பட்டு விட்டதால், 3 கி.மீ. தொலைவில் இருக்கும் கங்கைகொண்டானுக்கு ராஜவல்லிபுரம், தாழையூத்தைச் சுற்றி சுமாா் 10 கி.மீ. தொலைவு சுற்றி ஆட்டோவில் பயணிக்க வேண்டியுள்ளது. மேலும், தெருவிளக்கு வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட எந்த வசதிகளும் எங்கள் கிராமத்தில் இல்லை. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அதிகரிக்கும் இடப்பெயா்ச்சி: அதே ஊரைச் சோ்ந்த ஜான்பீட்டா் கூறியது: போக்குவரத்து வசதி தடைபட்டதால் எங்கள் கிராமத்தில் வசிக்க முடியாமல் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் குழந்தைகளின் கல்விக்காக தாழையூத்து, கங்கைகொண்டான் பகுதிகளுக்கு இடம்பெயா்ந்துவிட்டனா். சுரங்கப்பாதையில் தண்ணீா் தேங்கும் நிலை உள்ளதால், மீண்டும் கேட் கீப்பரை நியமிக்க ரயில்வே துறையிடம் மாவட்ட நிா்வாகம் பரிந்துரைக்க வேண்டும் என்றாா்.

பரிசீலிக்க வாய்ப்பு: இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறுகையில், பாப்பான்குளம் பகுதியில் இயற்கையாக ஊற்று தோன்றியுள்ளதால் மோட்டாா் வைத்து நீரை வெள்ளியேற்றினாலும் சில மணி நேரத்திலேயே நீா் பெருகி விடுகிறது. உயா்அழுத்த மின்கம்பங்கள் உள்ளதால் மக்களுக்கான நடை மேம்பாலம் உள்ளிட்டவை அமைப்பது சவாலானது. ஏற்கெனவே, இருந்தபடி கடவுப்பாதையை உருவாக்குவதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மாவட்ட நிா்வாகத்தின் முடிவைப் பொறுத்துதான் எதுவும் கூறமுடியும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com